ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வு மையத்தில் ககன்யான் ஆய்வு திட்ட பரிசோதனை வெற்றி

சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கான ககன்யான் திட்ட ஆராய்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த திட்டப்பணிக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று ககன்யான் திட்டத்துக்கான பூஸ்டர் கருவிகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இந்த திட்டத்துக்காக ஜி.எஸ்.வி.எம்.கே.3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் எச்.எஸ்.200 பூஸ்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பூஸ்டர்கள் திரவ சக்தியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பூஸ்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ருத்திரன் சாராபாய் விண்வெளி கழகத்தில் தயாரிக்கப்பட்டதாகும். 20 மீட்டர் நீளமும், 3.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பூஸ்டர்கள் உலகில் 2வது மிகப்பெரிய திரவ சக்தி பூஸ்டர்கள் ஆகும். நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஆய்வு மையத்தில் இந்த பூஸ்டர்கள் பரிசோதிக்கப்பட்டன.

மொத்தம் 203 டன் திரவ சக்தி கொண்ட பூஸ்டர்கள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியே பயங்கர சத்தத்துடன் குலுங்கியது. இந்த பூஸ்டர் பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் பூஸ்டர் பரிசோதனை நடந்தபோது அதனால் மிகப்பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. அந்த நில அதிர்வு பழவேற்காடு வரை உணரப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ள இந்த ஏரியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்தான் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வு நிலையம் அமைந்துள்ளது.

நேற்று காலை அங்கு பூஸ்டர் பரிசோதனை செய்யப்பட்டபோது பலத்த வெடி சத்தத்தை பழவேற்காடு பகுதி மக்கள் கேட்டனர். பயங்கர சத்தத்துடன் வீடுகள் குலுங்கியதால் கடற்கரை மற்றும் ஏரி பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு அலறியடித்தபடி வெளியேறினார்கள்.

வெடி சத்தமும், நில அதிர்வும் எதனால் ஏற்பட்டது என்று முதலில் அவர்களுக்கு தெரியவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டாவில் ககன்யான் திட்டத்துக்காக பூஸ்டர் பரிசோதனை நடந்தது அவர்களுக்கு தெரிந்தது. அதன்பிறகு அவர்கள் குழப்பம் நீங்கி வீடுகளுக்கு திரும்பினார்கள்.