சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட தீர்மானம்- தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை பாமகவும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தலை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநதி கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஆனால், அதன் பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் வழக்காடும் மொழியாக ஆக்கப்படவில்லை. அப்போதைய மத்திய அரசு, தாமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தில் கருத்தைக் கேட்டது. உச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு சட்டரீதியாகவோ, கட்டமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதைப் பயன்படுத்தி அலகாபாத், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் பாலைவனப் பயணத்தின் போது தென்படும் சோலைவனத்தைப் போல, நீதிமன்ற விசாரணைகளை உள்ளூர் மொழிகளில் நடத்தப்படும் என்று பிரதமரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரே நேரத்தில், ஒரே நிகழ்வில் கூறியிருப்பது சாதகமான திருப்பம் ஆகும்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி 15 ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டு விட்டது.

எனவே, தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் புதிய தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்