சுயநலம் இல்லாமல் சேவை செய்து காங்கிரசுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்- சோனியா வேண்டுகோள்



சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு இறுதியில் இமாசல பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் காங்கிரஸ் உள்ளது. இதற்காக அக்கட்சி தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கட்சியை வலுப்படுத்த மந்திரகோல் எதுவும் நம்மிடம் இல்லை. கட்சிக்குள் சுயவிமர்சனம் தேவைதான். அதற்காக நமது தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் அது இருக்க கூடாது. கட்சியை வலுப்படுத்த தேவையான ஒற்றுமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிசெய்யகட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் கட்சிதான் உயிர் மூச்சாக உள்ளது. ஆனால் கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு சுயநலம் இல்லாமல் சேவை செய்து காங்கிரசுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வருகிற 13 ந்தேதி முதல் 15ந்தேதி வரை காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இது வழக்கமான கூட்டமாக இருக்க கூடாது.

தேர்தல் சவால்களை எதிர்கொள்வதற்கான சீர்திருத்தங்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான களமாக இந்த கூட்டம் இருக்க வேண்டும்.