இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைபுது டெல்லி:

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

பின் காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் லிரனுடன் மோதி தோல்வியை தழுவினார். வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அவரது சிறிய தவறினால் தோல்வியுற்று 2வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தா, பொதுத்தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.