முல்லைப்பெரியாறு
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு



வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று கன மழையாக கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்க இந்த மழை உதவியதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 125 அடிக்கு கீழ் சரிந்த நிலையில் அவ்வப்போது பெய்த சாரல் மழையினால் படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று 125.05 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 125.15 அடியாக உயர்ந்தது. இதே போல நேற்று 100 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 350 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3650 மி.கன அடியாக உள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்க கூடும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதே போல் வைகை அணை நீர் மட்டம் 68.50 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5446 மி.கன அடியாக உள்ளது.