10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடுவன்னியர்களுக்கு என்ன செய்யப்போகிறது திமுக…!
வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கூடிய ஒரே குறைபாடுகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பினை அங்கீகரிப்பதாகவும் கூறுகிறது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு திமுக அரசும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் என்ன செய்யப்போகிறார்கள். திமுகவில் உள்ள வன்னியர்கள் முதல்வரிடம் எத்தகைய அழுத்தத்தை கொடுத்து சமூக நீதியை நிலைநாட்ட போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட வன்னிய தலைவர்கள் குறிப்பாக பல கட்சிகளில் உள்ள வன்னிய தலைவர்கள் இந்த இடஒதுக்கீட்டு பிரச்சனையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கும் எந்த வகையில் அழுத்தம் தரப்போகிறார்கள் என்ற கேள்வியும் பொதுவாக எழுந்துள்ளது. தமிழக அரசைப் பொறுத்தவரை நீதிமன்றத்தை காரணம் காட்டி இந்த இடஒதுக்கீட்டு விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ளப்போகிறதா? அல்லது சமூக நீதியை முன்னிறுத்தி திராவிட மாடல் என்ற புதிய தொடக்கத்தை காரணம் காட்டி சமூக நீதிக்கு ஆதாரவாக சட்டத்தின் துணைக்கொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு உரிய ஏற்பாட்டினை முதல்வர் முன்னிறுத்தி செல்லப்போகிறாரா? அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி வன்னியர்களின் உள்ஒதுக்கீட்டு கோரிக்கையை தள்ளிப்போடப் போகிறாரா? என்பதனை முதல்வர் அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வன்னியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை உச்சநீதிமன்றம் கூறியு-ள்ளப்படி மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து சாதி சமுதாயத்தினரின் கருத்துக்களை கேட்டறிந்து சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி சட்டமாக்கி வன்னியர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பாரா? அல்லது குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்து சாதி வாரி கணக்கெடுப்பு- நடத்தி அந்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க போகிறாரா? என்பதையும் அறிய விரும்புகிறார்கள் வன்னியர்கள்.
கடந்த கால ஆட்சியின் மீது குறைசொல்வதை தவிர்த்து விட்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த வன்னியர்களுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக செயல்பட போகிறாரா? என்ற கேள்வியையும் முதல்வர் முன்னாள் வன்னியர்கள் முன்வைக்க விரும்புகிறார்கள். சட்ட ரீதியான தீர்வா? அல்லது அரசியல் ரீதியான தீர்வா? எந்த தீர்வு சமூக நீதியை பாதுகாக்குமோ அந்த வகையில் தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை முன்னெடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பது வன்னியர்களின் கோரிக்கை.
முதல்வர் அவர்களை நம்பி தான் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுவுக்கு வன்னியர்கள் வாக்களித்தார்களே தவிர திமுகவில் இருக்கும் வன்னிய தலைவர்கள் பேச்சை கேட்டு வன்னியர்கள் வாக்களிக்கவில்லை என்பதை முதல்வர் அவர்கள் அறிந்திருப்பார் என்று நம்புகிறோம். ஆகவே எங்கள் கோரிக்கையை நேரிடையாகவே முதல்வரிடம் அவரது கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்ற வகையில் வன்னியர் சமுதாயம் சங்கங்களை முன்னெடுத்து செல்லும் பல்வேறு அமைப்புகளும் பல தனிமனித தலைவர்களும் முதல்வருக்கு தங்கள் வேண்டுகோளாகவே தங்கள் கருத்தினை ஊடகம் மூலம் பதிவு செய்துள்ளார்கள். முடிவு முதல்வர் கையில் வாக்குகள் வன்னியர் கையில்.
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முதல்வரின் முடிவை பொறுத்து எங்கள் முடிவு அமையும் என்று முதல்வரின் கவனத்தை ஈர்க்கிறார்கள் வன்னியர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்களும். முதல்வரின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்கின்ற முயற்சியை அக்னிமலர்கள் இந்த செய்தியை வெளியிடுகிறது.
- டெல்லிகுருஜி