மனக்கஷ்டம் போக்கும் எளிய பரிகாரங்கள்



லட்சுமி நரசிம்மர்

மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கர்ம வினைப் பயனை அனுபவிக்க வேண்டியது இருந்தால்தான், மனிதப் பிறவியும் ஏற்படுகிறது. எனவே மனிதனும், அவனுக்கான துன்பமும் பிரிக்க முடியாதவை. ஆனால் அந்த துன்பங்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.

கணவன்- மனைவி ஒற்றுமையாக வாழ, இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30- 12), மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு நெய் தீபமும் ஏற்றுங்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மகரிஷிகளால் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரங்களில் ஒன்று.

பெரும் துன்பத்தைத் தரக்கூடிய கடன் தொல்லையில் இருந்து விடுபட, யோக நரசிம்மரையும், சிறிய கடன் தொல்லைகளுக்கு லட்சுமிநரசிம்மரையும் வணங்குங்கள். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகும்.

கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்கும பொட்டு வைத்து, எலுமிச்சைப் பழத்தை திரிசூலத்தில் குத்தி வைத்து வழிபட்டால், திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏவல், பில்லி, சூனியம் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

பைரவர் சன்னிதியில் தொடர்ச்சியாக 8 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தாலும், கொடுத்த கடன் வசூலாகும்.

உங்கள் வாழ்க்கையில் சனி பகவானின் பாதிப்பு குறைவதற்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களுக்குச் சென்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க வேண்டும். சனிக்கிழமைகளில், சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினாலும் பலன் கிடைக்கும்.

சிவன்‬ கோவிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.

பிரதோஷ காலத்தில், பார்வதியுடன் ரிஷபாரூட மூர்த்தியாய் காட்சி தரும் ஈசனை வழிபடுபவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் அன்று, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால், திருமணம் விரைவில் நடந்தேறும்.