தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்


   


சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால், அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவு படுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.