ரூ.5,588 கோடி முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

   


சென்னை:

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் இன்று பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சாம்சங் நிறுவனத்தினரும், தொழில்துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

சாம்சங் நிறுவனம், ரூ.450 கோடி முதலீடு மற்றும் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், கணினித் திரைகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் சலவை சாதனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும், தொழிற்பூங்காவிலும் அமைத்திட உத்தேசித்து அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் முன்னிலையில் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம்10-ந் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒரே வருடத்திற்குள் ஆலை கட்டி முடிக்கப்பட்டு 2007-ம் ஆண்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த முதலீடு இப்போது ரூ.1,800 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022-ம் ஆண்டில் நிறைவு பெறும். 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 80 லட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகளை வருடத்திற்கு உற்பத்தி செய்யவும், 2024-ம் ஆண்டுக்குள் 144 லட்சம் அளவிற்கு அதன் உற்பத்தி பெருக்கவும் திட்டமிட்டுள்ளது.