இன்று உலக தண்ணீர் தினம்- தண்ணீரை ‘உயிர்போல் காப்போம்' என்று உறுதி ஏற்போம்


   


‘நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு. பொதுமக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். தண்ணீரில் இருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்கு தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தண்ணீரின் தேவையை உணர தவறினால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களுடன் கூறுகின்றனர். குறிப்பாக உலக அளவில் 5-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அதேபோல், ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள். நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இதேநிலை தொடரும் பட்சத்தில், உலகில் வரும் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 570 கோடி மக்கள் ஒரு ஆண்டில் ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என ஐக்கிய நாட்டு சபை எச்சரித்துள்ளது.

உலக நீர் தினத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் தினம் ‘நிலத்தடி நீர்: கண்ணுக்கு தெரியாததை காணச்செய்தல்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள், பாரம்பரியம், கலாசாரம், பொருளாதாரம், ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி என சுற்றுச்சூழலுடன் தண்ணீர் ஒன்றியிருப்பதால் தண்ணீரை பாதுகாக்கவும் போற்றவும் மக்களுக்கு தெரியவேண்டும் என்ற கருத்துடன் உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தண்ணீரை சேமிக்காமல், சிக்கனமாக பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் கூறியது போல், அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை வீணாக்க மாட்டோம். மாசுபடுத்தாமல், சிக்கனமாக பயன்படுத்தி 'உயிர்போல் காப்போம்' என்ற உறுதி மொழியை அனைவர் மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.