பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க இதுதான் முக்கிய காரணம்- மாயாவதி விளக்கம்தேர்தல் தோல்வியால் சுணங்கிவிடமாட்டோம், தோல்வியில் இருந்து பாடம் கற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மாயாவதி நம்பிக்கை தெரிவித்தார்.

லக்னோ:

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வி குறித்து இன்று பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, கட்சியின் தோல்விக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி மற்றும் சில ஊடகங்கள் மீது குற்றம்சாட்டினார். 

பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ என தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்திவிட்டதாக பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் பிடீம் அல்ல என்றும் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாங்கள் மாறுபட்டவர்கள் என்றும் கூறினார். தேர்தல் தோல்வியால் சுணங்கிவிடமாட்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘பகுஜன் சமாஜ் கட்சியை பாஜகவின் பி டீம் எனக் காட்டும் ஊடகங்களின் ஆக்ரோஷமான பிரச்சாரம்தான் முஸ்லிம் மக்களையும் பாஜக எதிர்ப்பு வாக்காளர்களையும் மாற்றியது. 

முஸ்லிம் மக்களின் இந்த முடிவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் உத்தரபிரதேசத்தில் 'காட்டு தர்பார்' திரும்பும் என உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர சமூகத்தில் உள்ள எங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதனால்தான் இந்த சமூகத்தினர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இதுதவிர  சமாஜ்வாடி கட்சி போல பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் வலுவாக போட்டியிடவில்லை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.’ என்றார் மாயாவதி.