4 நாள் பயணமாக
மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்
சென்னை:

கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவு செய்யப்படவில்லை.

தற்போது கொரோனா வெகுவாக குறைந்து விட்டதால் வருகிற 2-ந்தேதி (ஏப்ரல்) அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி அளிக்க ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைப்பது குறித்து பல்வேறு மாநில எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்துகிறார். இது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலையிலும் நடைபெறுகிறது. இதில் எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.

மேலும் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதியின் சிலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இன்று 3-வது முறையாக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 3 நாட்கள் பல்வேறு தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதால் அவரது பயணம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.