நிதி பற்றாக்குறை குறைக்கப்படும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்சென்னை:

சட்டசபையில், நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தில் பேசிய முன்னாள் சபாநாயகர் (அ.தி.மு.க. உறுப்பினர்) தனபால் பேசுகையில், ‘‘நிதிநிலை அறிக்கையில் புதிதாக வருவாயை உயர்த்த திட்டம் ஏதும் இல்லை, செலவினத்தை குறைக்கவும் திட்டங்கள் ஏதுமில்லை என்றும், சீர்திருத்தம் செய்ததாக தெரியவில்லை’’ எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்போது நிதிபற்றாக்குறை ரூ.92 ஆயிரம் கோடி வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது நிதிநிலை அறிக்கை 82 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாகவும், சரியான நிதி திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட சுமார் ரூ.10 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் சபாநாயகர் தனபால், நிதிநிலை அறிக்கையை படித்தால் அவருக்கு தெரியும் என கூறிய அவர், நடப்பாண்டில் நிதி பற்றாக்குறையை மேலும் படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு, ஏழு நிதிநிலை அறிக்கைகளில் இதுபோன்று நிதிப்பற்றாக்குறை அளவு குறைந்தது இல்லை என்றும், ஒரே வருடத்திற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையை குறைத்துள்ளோம் எனவும் அவர் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா 2-ம் அலையின்போது பல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதால், அதன் மூலம் வருவாய் வந்தது என்றும் தெரிவித்தார்.