தேசிய அரசியலில்
திராவிட மாடல் அரசியல் எடுபடுமா?  
மு.க.ஸ்டாலின் திட்டம்
தேசிய கட்சிகள் ஏற்குமா?  


திராவிட மாடல் அரசியல் என்பதும் திராவிட மாடல் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எந்த வகையில் அரசியல் ரீதியாக பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திராவிடம் என்ற சொல்லாடல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டை முன்னிறுத்தி சொல்லப்பட்டு வந்த வார்த்தையாகும். குறிப்பாக தென்னிந்தியாவையும் ஓடிசாவையும், மகராஷ்டிராவையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாடலாக திராவிடத்தை குறிப்பிடுவார்கள். அது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஓடிசா போன்ற மாநிலங்கள் திராவிடம் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதில்லை. இதை தவிர காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாக திராவிடம் முன்னேற்ற கழகம் பார்க்கப்பட்டது. அதே காங்கிரஸ் கட்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் இயங்குவது போல் தற்பொழுது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல்காந்தி அவர்களுடைய செயலும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. “உங்களில் ஒருவன்” நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற ராகுல்காந்தியின் பேச்சும் அதன் பிறகு சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ்காரர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசும் பொழுதும் ராகுல்காந்தியின் உரை காங்கிரஸ் கட்சியை வலுவுள்ளதாக உருவாக்க வேண்டும் அதே நேரம் திமுகவின் ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இதுவரை இப்படி ஒரு ஆலோசனையை பகிரங்கமாக வடமாநில காங்கிரஸ் தலைவர்களும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களும் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களுக்கு கட்டளையிட்டது இல்லை.மாறாக ராகுல்காந்தி அவர்களுடைய சிறப்புரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை விட திமுகவை பாதுகாக்க வேண்டும் காங்கிரஸ்காரர்கள் என்பது போல் அமைந்துள்ளது காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் கேரள முதல்வர் பிரணாய் விஜயன், பீகார் மாநில எதிர்கட்சி தலைவராக இருக்கும் லாலுபிரசாத்தின்  மகன் தேஜேஸ்யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, போன்றவர்களும் திராவிட அரசியல் பேசும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட போவதாக அறிவித்திருப்பது, எத்தகைய அரசியல் சித்தாந்தம் என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு காலத்தில் பாஜக கட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அனுபவித்த திமுக, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் விதமாக செயல்படுவது எதிர்காலத்தில் எத்தகைய ஆட்சி உருவானால் திமுகவின் ஆதரவுகளை எவ்வாறு இருக்கும் என்பதை அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஒருவேளை  சு0சு4 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் அல்லது பல்வேறு மாநில கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று புதிய ஆட்சி அமைத்தால் அது எத்தனை காலம் நீடிக்கும் என்பதும் அப்பொழுது திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைமையும் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டால் தமிழ்நாட்டில் திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசுக்கு எதிரான நிலையை எடுக்க மாட்டார்கள் என்ன உத்தரவாதம். தேசிய அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு காங்கிரஸ் கட்சி பலியாவதை தவிர வேறுவழியில்லை என்று நிலைக்கு மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. இதற்கு உதாரணமாக மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி போன்றவர்கள் ஏற்கனவே பாஜக கட்சியோடு இணைந்து செயல்படுவதில் ஒருவருக்கு ஒருவர் மாற்றுக் கருத்துகளோடு இருந்துக் கொண்டு காங்கிரசை ஒரம் கட்டுகின்ற வேளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரம் தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெறுவதை திமுக தனது அரசியல் ராஜதந்திர முறையை கையாளுகிறது. இத்தகைய நடைமுறைகள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் திமுகவிற்கு காங்கிரஸ் உதவிக்கரமாக இருந்துள்ளதை பார்க்க முடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை அங்கம் வகிப்பதையே வலது, இடது இரு கட்சிகளும் திமுகவின் கரங்களில் பற்றி நின்று கொண்டிருக்கிறது.          

அதே போல் சாதி கட்டமைப்பை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகளும், திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதையே தனது வளர்ச்சிக்கு ஏற்ற பாதையாக முடிவெடுத்து திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. இது போல் இன்னும் சில சிறுபான்மை இயக்கங்கள் திமுக கூட்டணியில் விடாப்பிடியாக இருந்துக் கொண்டு பாஜக&க்கு எதிரான ஒரு நிலையையும், தமிழ்நாட்டில் அதிமுகவை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது திமுக. இதனை வெளிப்படுத்தும் விதமாகவும் உங்களில் ஒருவன் என்ற நூல் வெளியிட்டு விழாவின் நிகழ்ச்சியின் சாரஅம்சமும் கூர்ந்து கவனித்தால் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க போவதாகவும் எதிர்காலத்தில் அகில இந்திய அரசியலில் வழிநடத்தும் ஒரு தலைமையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற முயற்சியில் திமுக அதன் தோழமை கட்சிகளும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதிய அணியை உருவாக்குகின்ற ஒரு தொடக்கமாக திராவிட மாடல் என்ற சித்தாந்தத்தை பயன்படுத்தி அகில இந்திய அளவில் தங்கள் ஆளுமையையும், ஆதிக்கத்தையும் நிலை நிறுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அடியை எடுத்து வைக்க தொடங்கியிருக்கிறார். இந்த முயற்சிக்கு எந்தவகையில் திமுகவிற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அரசியல் ரீதியாக கைகொடுக்கும் என்பதையும் வடநாட்டு தலைவர்கள் இதற்கு ஒத்துவருவார்களாக என்பதையும், தேசிய அரசியலில் திமுக தாக்குப்பிடிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு சு0சு4 ஆம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு விடை கிடைக்கும். 

திராவிட மாடல் அரசியல் பாஜக கட்சியை எந்த வகையிலும் பாதிப்புக்கு உள்ளாக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியை அது பெரிய அளவில் சரிவுக்கு வழிவகுக்கும்.


- டெல்லிகுருஜி