நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்
   



சென்னை:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.

12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்தது. மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மொத்தமுள்ள 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் மூலம் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும், போட்டியில்லாமல் வெற்றி பெற்றவர்களும் இன்று பதவி ஏற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதற்கான பதவி ஏற்பு விழா ஒவ்வொரு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அந்தந்த கமி‌ஷனர்கள் புதிய கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா ஒவ்வொரு அலுவலகங்களிலும் உற்சாகமாக நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை அனைத்து பொறுப்புகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சரிசமமாக பதவி வகிக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதி மொழியை வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் புதிய வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டதால் உற்சாகம் களைகட்டியது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள், தொண்டர்கள் கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு படையெடுத்தனர்.

இத்தேர்தலில் பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்று இருப்பதால் அவர்களது பதவியேற்பை காண கணவன்மார்களும், உறவினர்களும் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர்.

21 மாநகராட்சிகளில் பதவி ஏற்பு விழா விமரிசையாக நடந்தது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளில் பதவி ஏற்பு விழா உற்சாகமாக நடைபெற்றது. எங்கு பார்த்தாலும் தி.மு.க. தொண்டர்களும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் தொண்டர்களும் கொடியுடன் காணப்பட்டனர்.

அ.தி.மு.க.வினரும் உற்சாகத்துடன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்று இருந்தனர். சுயேட்சை கவுன்சிலர்களும் உற்சாகமாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றதை தொடர்ந்து நாளை மறுநாள் (4-ந்தேதி) மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெறுகிறது. 21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெறுகின்றன.

போட்டி இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனுக்கள் இன்று வழங்கப்படுகின்றன. தி.மு.க. கூட்டணியே பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருப்பதால் தேர்தலுக்கான வாய்ப்பு இருக்காது.

வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களில் யாரேனும் ஒருவரை மேயராகவோ, துணை மேயராகவோ பெரும்பான்மை உள்ள கட்சி பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாளை மறுநாள் மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடைபெறுவதால் நாளைக்குள் (3-ந்தேதி) யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேயர், துணை மேயர் பதவிகளுக்கு தி.மு.க.வில் கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு சில துணை மேயர் பதவிகளையும், நகராட்சி தலைவர் பதவிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதுதவிர மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது