புலம் பெயர் தொழிலாளர்களுக்காக நடமாடும் உதவி மையங்கள்சென்னை:

2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொழில், பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, புலம் பெயர் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இத்தொழிலாளர்கள் பற்றி போதிய விவரங்கள் இல்லாமை கொரோனா தொற்றின்போது புலப்பட்டது. அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடையவும், அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்த நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் செயல்படுத்தப்படும்.

சமண, பவுத்த மதங்களைச் சோர்ந்த புகழ் பெற்ற தலங்கள் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள இத்தலங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க உலகத் தரத்தில் சுற்றுலா வசதிகள் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக் கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக, தொன்மையான கோவில்கள் தமிழகமெங்கும் பரவி உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார் போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.