நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்துவிட்டன: உக்ரைன் போர் இன்று 1 மாதத்தை எட்டியது
900 அப்பாவிகள் பலிபோர்க்களத்தில் ராணுவ சீருடையுடன் இருந்த உக்ரைன் வீரரை பிரிய மனமின்றி அவரது பிஞ்சு குழந்தை கட்டிப்பிடித்து மன்றாடிய காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாகவே இருந்தன.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு ஒரு மாதமாகிறது. இருப்பினும் ரஷியாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்து இருக்கிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷியா நடத்த தொடங்கிய தாக்குதல்கள் அடுத்தடுத்த நாட்களில் உக்கிரமானது.

இந்த தாக்குதல் காரணமாக உக்ரைன் மக்களும், அங்கு தங்கியிருந்த மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறினார்கள். இப்படி போர் களத்துக்கு நடுவே உக்ரைன் நாட்டினரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் ஆபத்தான முறையில் வெளியேறிய வீடியோக்களும், புகைப்பட காட்சிகளும் நெஞ்சை உருக்கும் வகையிலேயே அமைந்திருந்தன.

போர்க்களத்தில் ராணுவ சீருடையுடன் இருந்த உக்ரைன் வீரரை பிரிய மனமின்றி அவரது பிஞ்சு குழந்தை கட்டிப்பிடித்து மன்றாடிய காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாகவே இருந்தன.

இப்படி உக்ரைன் போர்க்கள காட்சிகளை விவரித்துக் கொண்டே செல்லலாம். உக்ரைனில் நடைபெற்று வரும் ரஷிய படைகளின் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள்.

இவர்களில் பெரும் பாலானவர்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் உக்ரைனை விட ரஷியா பல மடங்கு வலிமை வாய்ந்ததாகும். இதனால் உக்ரைன் மீது அந்நாடு போர் தொடுத்த போது சில நாட்களிலேயே உக்ரைன் முழுவதையுமே ரஷியா கைப்பற்றிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. ரஷிய படையினரை உக்ரைன் ராணுவத்தினர் இவ்வளவு தூரம் வலிமையாக எதிர்கொள்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அந்த அளவுக்கு உக்ரைன் ராணுவத்தினர் ரஷிய படையினரை சாதுர்யமாக எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் ரஷிய படையினரால் தங்களது இலக்குகளை எளிதாக எட்ட முடியாத நிலையே உள்ளது.

உக்ரைன் தலைநகரமான கீவ் நகரை ரஷிய ராணுவம் சுற்றி வளைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதிலும் அந்த நகரை இன்னும் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதுவும் ரஷியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கீவ் நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் வணிக வளாகம் ஒன்று சேதம் அடைந்து 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ரஷிய படைகளின் தாக்குதலை கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் சமாளித்து வந்த போதிலும் ரஷிய படைகளின் கண்மூடித்தமான தாக்குதலில் உக்ரைனில் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. ரஷிய படையினரின் குண்டு வீச்சு தாக்குதலால் உக்ரைனின் அழகிய நகரங்கள் பல சின்னாபின்னமாக சிதறி கிடக்கின்றன.

தெற்கு பகுதியில் உள்ள மரியுபோல் துறைமுகமும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நகரம் முழுவதுமே சுக்கு நூறாக நொறுங்கி கிடக்கிறது. இதனால் அங்கு சுமார் 1 லட்சம் பேர் உணவின்றி பட்டினியால் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அங்கு தவித்து வரும் பொதுமக்களை மீட்பதற்கு கூட ரஷிய ராணுவம் கருணை காட்டவில்லை என்றும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

பொதுமக்களை மீட்டு வெளியில் கொண்டு வருவதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும் ரஷியா முட்டுக்கட்டை போட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பொதுமக்களுக்கு உதவி செய்ய சென்ற மனிதாபிமான தூதர் ஒருவரையும் ரஷியா சிறைபிடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் துணை பிரதமரான இர்னி வெரஸ்கல் கூறும்போது, ‘‘11 பஸ் டிரைவர்களையும், 4 பணியாளர்களையும் ரஷிய ராணுவம் அவர்களது வாகனங்களோடு சிறை பிடித்து வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மரியுபோல்நகரில் இருந்து தப்பிச் சென்று போலந்தில் தஞ்சம் அடைந்துள்ள பெண் ஒருவர் ரஷிய ராணுவம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். கடந்த 20 நாட்களாக ரஷிய ராணுவம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இடைவிடாமல் குண்டுகளை வீசியது என்றும், கடைசி 5 நாட்களாக 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷிய விமானங்கள் வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தன என்றும் மிரட்சியுடன் தெரிவித்துள்ளன.

மரியுபோல் நகரில் வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ‘அசோவ்’ கடல் பகுதியில் ரஷிய கப்பல்கள் ரோந்து சுற்றி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதனால் உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே உக்ரை னின் செர்னிகிவ் நகரையும், கீவ் நகரையும் இணைக்கும் முக்கிய பாலம் ஒன்றை ரஷிய ராணுவம் நேற்று தகர்த்துள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் தவித்து வரும் பொதுமக்களை மீட்க முடியாத இக்கட்டான சூழலுக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே போர்க்களத்தில் உள்ள ரஷிய ராணுவத்திற்கும் உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. போர் தொடங்கி ஒரு மாதமாகி இருக்கும் நிலையிலும் உக்ரைன் நாட்டு ராணுவத்தினருடன் ரஷிய ராணுவ வீரர்கள் பல பகுதிகளில் போராடும் நிலையே நீடிக்கிறது.

ரஷிய ராணுவம் மேற்கொண்ட தவறான திட்டமிடலே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ரஷியா தரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 900 அப்பாவி மக்களும் போரில் உயிரிழந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களிலும் போர் நீடிக்கும் பட்சத்தில் இந்த உயிரிழிப்புகளும், பாதிப்புகளும் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.