தேர்தல் பணி அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு



தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளருக்கு ரூ.1,000-ம், வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளருக்கு ரூ.450-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியத்தை மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி அறிவுறுத்தி உள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 3 நாட்கள் வழங்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முந்தையநாள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாட்களில் உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்-1: பயிற்சிக்கு ரூ.250 வீதம் 3 நாட்ளுக்கு ரூ.750-ம், உணவுக்கு ரூ.300-ம், தேர்தலுக்கு முந்தைய நாள் ரூ.250, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களுக்கு ரூ.250-ம் மொத்தம் ரூ.1,550 வழங்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்-2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ரூ.600-ம், வாக்குப்பதிவு அலுவலர்-3-க்கு ரூ.1,550 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.800-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.600-ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வரவேற்பு அலுவலருக்கு ரூ.800-ம், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு ரூ.850-ம், வாக்கு எண்ணிக்கை உதவியாளருக்கு ரூ.650-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.300-ம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளருக்கு ரூ.1,000-ம், வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளருக்கு ரூ.450-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.