வாக்கு அளிக்க விரும்பாத வாக்காளர்கள்!
என்ன காரணம்!!நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரண்டு இடங்களை தவிர ஒன்று அரியலூர், இன்னொன்று தர்மபுரி தவிர மற்ற ஊர்களில் மிக குறைந்த அளவு வாக்காளர்களே வாக்கு அளித்து உள்ளார்கள். ஏன் இந்த நிலை? என்று விசாரித்த பொழுது சென்னை நகர மக்கள் சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி ஆகிய மூன்று நகராட்சிகளும் அதில் அடங்கிய வார்டு கவுன்சிலர்களும், அதிக அளவில் பெண்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இன்னொன்று மக்களிடம் வாக்கு அளிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாகவும் தெரியவருகிறது. மூன்றாவதாக தொகுதி வரையறை (வார்டு) செய்ததில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறிப்பாக நகர்பகுதி முதல் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய மூன்று வகையான தேர்தலும் உள்ளடக்கியதால் இதில் 50 சதவிகிதம் பெண்கள் வார்டுகளாகவும் அதில் பாதி பட்டியலின மக்கள் வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படி பிரிக்கப்பட்டுள்ளதில் சென்னை நகரை பொறுத்தவரை மேயர் பதவி பட்டியலின மக்களுக்கும் அதன் அருகில் உள்ள தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, இரண்டும் சேர்ந்து மூன்று மேயர் பதவிகளும் பட்டியலின மக்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் வாக்காளர்களை அதிக அளவில் கவராமல் போயிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதே போன்ற குற்றச்சாட்டுக்கு பல்வேறு நகராட்சிகளும், பேரூராட்சிகளும் அடங்கியுள்ளன. மேலும் பெண்கள் அதிகளவில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று வார்டுகளை பிரித்திருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் பெண்களை முன்னிறுத்தி ஆண்களே அதிக அளவில் வாக்கு சேகரிப்பதில் ஈடுப்படுவது வெளிப்படையாக தெரியவருவதால் கட்சிப் பொறுப்பு கணவருக்கும், அரசு பொறுப்பு மனைவிக்கும் என்ற அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது சிலருக்கு அதிருப்தியையும் பலருக்கு ஆர்வமின்மையும் தோற்றுவித்திருக்கலாம். இதன் மூலமும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்காமல் போனதற்கு காரணங்களாக கூறப்பட்டாலும் சென்னை நகரை பொறுத்தவரையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருந்தது பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.

குறிப்பாக ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை தோற்றுவித்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதே போல் இன்னும் சில இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று எண்ணி எதிர்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க கூடும் என்றும் தெரிகிறது. மொத்தத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்காதது, வாக்கு அளிக்காமல் இல்லங்களிலேயே இருந்தது ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகள் மீதும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மீதும் வாக்காளர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருப்பதும்  குறைந்த வாக்குப்பதிவு காரணமாக அமைந்து உள்ளது. வாக்கு அளிக்க உரிமை இருந்தும் வாக்கு அளிக்காமல் இருப்பதும் அரசியல் சலுகைகளை பெற்றுக் கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருப்பதும் ஒருவகையில் பார்த்தால் அவர்கள் குற்ற உணர்வு உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள். எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது.


- டெல்லிகுருஜி