மணிப்பூர் சட்டசபை தேர்தல்- பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜே.பி.நட்டா



பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


இம்பால்:

மணிப்பூரில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சிறப்பான தேர்ச்சி பெற்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும், 12ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும், மணிப்பூர் திறன் பல்கலைக்கழகம் நிறுவப்படும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பென்சன் 1000 ரூபாயாக உயர்த்தப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மணிப்பூரில் வரும் 27ம் தேதி மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.