நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது- அண்ணாமலை


தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் முடியப் போகின்றது. எங்கள் ஆட்சி "விடியல் ஆட்சி" என்றார்கள். மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை தான் நடந்து வருகின்றது.

தமிழக முதல்வர் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பொங்கல் பரிசைக் கூடச் சிறப்பாக கொடுக்க முடியாத நிர்வாகம் நடத்தி வரும் தமிழக முதல்வர், அதில் நடந்த ஊழல் குறித்து இன்று வரையிலும் பேசாமல் இருப்பவர் இன்று புதிதாக அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பதனைத் தொடங்கி 37 தேசியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் "சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

யாருக்கெல்லாம் இந்தக் கடிதம் எழுதியுள்ளார் என்பதனை நாம் பார்த்தால் அவர்களின் தகுதியும் தராதரமும் நமக்குப் புரியும்?

இன்றைய சூழலில் தமிழகத்தில் காவேரி நதி நீர் பிரச்சினை வைத்து அரசியல் செய்ய முடியாது. கச்சத்தீவு வாயே திறக்க முடியாது. இலங்கை பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை.

எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளும் அவ்வப்போது முடிவுக்கு வந்து விடுகின்றது. முல்லைப் பெரியாறு என்பது முடிந்து போன ஒன்று. கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், அவர்களுடன் தி.மு.க. கூட்டாளியாக இருந்த சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியும் பேசியதில்லை. எந்த உரிமை பிரச்சினைகளையும் மாமன்றத்தில் கொண்டு வந்ததும் இல்லை.

காங்கிரஸ் இட ஒதுக்கீடு வி‌ஷயங்களில் என்ன சாதித்தது? ஓபிசி இட ஒதுக்கீடு ஏன் இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஆனது? இந்தியாவில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் அரை நூற்றாண்டுக் காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. 17 ஆண்டுகள் அதிகாரத்தைச் சுவைத்து தமிழகம் என்ன பெருமை அடைந்தது?

இது 1996 அல்ல, 2022. புதிய பாராளுமன்றம், புதிய தொழில் நுட்பக்காலம் என்று மோடியின் உழைப்பால் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் பொதுவான இந்தியா. "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதனை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கின்றோம். புது சுவாசத்தில் நான் இந்தியன் என்ற தேசிய சிந்தனையின் அடித்தளம் வலிமை அடைந்துள்ளது என்பதனை பா.ஜ.க.வின் அடிமட்டத் தொண்டன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஆட்சியை நடத்தத் தெரியாதவர்கள் நீண்ட நாட்களுக்குக் காரணம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. நீட் குறித்து தி.மு.க. உருவாக்கிய நாடகம் இன்று ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியதோடு முடிவுக்கு வந்து உள்ளது.