எல்லையில் போர் பதற்றம்:
உக்ரைனுக்கு விமான போக்குவரத்து ரத்துரஷியா - உக்ரைன் நாடுகள் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்த படியே இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.

அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடி மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன.எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. டச் விமான நிறுவனமான கே.எல்.எம். மறு அறிவிப்பு வரும் வரை உக்ரைனுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரேனிய ஏர்லைன் ஸ்கைஆப் நிறுவனத்தின் ஐரீஸ் குத்தகைதாரர் உக்ரேனிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்வதாக அறிவித்ததை அடுத்து போர்ச்சுக்கல்லில் இருந்து உக்ரைனின் கீவ் நகருக்கு சென்ற விமானம் மால்டோ வன் தலைநகர் சிசினாவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதேபோல் சில நாடுகளும் உக்ரைனுடனான விமான போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைனுக்கு வர வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் ஜெலேன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஜோபை டனுடன் தொலைபேசியில் பேசிய ஜெலேன்ஸ்கி, உங்களின் (ஜோபைடன்) கீவ் பயணம் ஒரு சக்திவாய்ந்த சமிக்சையாகவும் நிலமையை உறுதிப்படுத்தவும் உதவும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.