நீட் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம்-
முத்தரசன் குற்றச்சாட்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பத்தூர் நகராட்சியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. பாஜக அரசை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இதுபோன்ற நாடகத்தை அ.தி.மு.க அரங்கேற்றி வருகிறது.

பா.ஜ.க.வினர் குறுகிய அரசியல் நோக்கத்தோடு மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயங்களை தேடுகின்றனர்.

குஜராத் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க வினர் கலவரத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தற்போது கர்நாடகாவில் அதே பாணியை கையில் எடுத்துள்ளனர்.அங்கு பா.ஜ.க ஆட்சியில் உள்ளதால் இது போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது இவ்வாறு கூறினார்.