நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
7 வாக்குச் சாவடிகளில்
மறுவாக்குப்பதிவு 


   சென்னை:

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம்  5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

அதன்படி காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51, வார்டு எண் 179, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25 ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறுவாக்கு பதிவில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.  

திருமங்கலம் நகராட்சியில் உள்ள பெண்களுக்கான வார்டு எண் 17ல் பதிவேட்டில் கையெழுத்திடாமல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள16-வது வார்டில் சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தில் குளறுபடி ஏற்பட்டதால் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.