உள்ளாட்சி தேர்தல் முடிவு-
திமுகவுக்கு அதிக இடங்களில் வெற்றி
அதிமுகவுக்கு அதிக வாக்கு சதவிகிதம் உயர்வு!!    
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு 21 மாநகராட்சியும், 138 நகராட்சி, 489 பேரூராட்சி இவைகளில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக நேரடி தேர்தல் இல்லாமல் மறைமுக தேர்தல் என்பதால் ஆளுங்கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரம் எதிர்கட்சியான அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கி சதவிகிதத்தை உயர்த்திக் கொள்ளும் என்பது உறுதி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகியவைகளில் வெற்றிப் பெற்றவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி ஆதரவையே நாடுவார்கள். எதிர்கட்சியை விரும்பமாட்டார்கள். காரணம் ஆளுங்கட்சி இன்னும் நான்காண்டு காலம் பதவியில் நீடிக்கும் என்பதால் ஆளுங்கட்சியை ஏற்றுக்கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையை எடுத்தால் நாம் செலவு செய்த பணத்தை மீட்டெடுப்பதுடன் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையும் ஒருபுறம் எதிர்பார்க்கும் ஒப்பந்தப் பணிகளின் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம் என்று மற்றொருபுறம் கவுன்சிலர்களை கணக்குப் போட வைக்கும். மறைமுக தேர்தல் என்பதால் கட்சி தாவலோ அல்லது அணி மாறி வாக்கு அளித்தாலோ தங்கள் பதவிக்கு எந்த ஆபத்து வராது என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். இத்தகைய முடிவை பயன்படுத்திக் கொண்டு ஆளுங்கட்சியான திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேட்பாளர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கூறி கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கின்ற முயற்சியில் பெருமளவில் வெற்றிப்பெறுவார்கள்.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அதிக வாக்குகளை பெறுகின்ற முயற்சியிலே முழு கவனம் செலுத்தியிருப்பதால் வெற்றி தோல்வியை புறம் தள்ளிவிட்டு வாக்குகளின் சதவிகிதத்தை உயர்த்துவதற்கு இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இருந்தாலும் தங்கள் கட்சியின் இமேஜை உயர்த்துவதற்காக ஓரிரு மேயர் பதவிகளை அல்லது துணை மேயர் பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்க தோன்றும். அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளான பாமக, பாஜக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, ஆகிய கட்சிகளும் தங்கள் வாக்கு வங்கியை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் வெற்றிப்பெறுவது பற்றி கவலைப்படாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆகவே வாக்காளர்கள் பெரும்பாலும் மிக குறைந்த அளவில் வாக்கு அளித்திருப்பதால் பதிவான வாக்குகள் சதவிகிதம் மிக குறைவாக இருப்பதினால் ஆளுங்கட்சிக்கு மிகப் பெரிய அளவில் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு ஒரு சில இடங்களில் வெற்றிப் பெற கூடும். அத்தகைய வெற்றி வாய்ப்பு கட்சியை கடந்து தங்கள் வேட்பாளரின் சொந்த செல்வாக்கு ஊர்மக்களின் ஆதரவு போன்றவைகள் மூலம் இதுபோன்ற வெற்றியை ஒரு சில இடங்களில் பெற முடியும்.

நாளை மதியம் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி என்பது தெளிவாக தெரிந்துவிடும். அது வரை காத்திருப்போம்.    


- டெல்லிகுருஜி