மாநகராட்சி தேர்தல் இட பங்கீடு காங்கிரஸ் அதிருப்தி! நடுத்தெருவில் தொண்டர்கள்…!சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இடஒதுக்கீடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகும் திமுக கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டுமா? அப்படி தொடர்ந்தால் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் படுதோல்வி அடைவதுடன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் (2024) ஐந்து தொகுதிக்கு மேல் ஒதுக்க இயலாது என்று கூறி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுகின்ற வேலையை திமுக செய்வதற்கும் வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்ல மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தால் பாஜக கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசில் திமுக சார்பில் அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்படும். அப்போது காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்துவதோடு முற்றிலும் கூட்டணியில் இருந்து திமுக கழற்றிவிடும். இதையும் காங்கிரஸ் கட்சி சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையை திமுக உருவாக்கும்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கட்சி வெளியேறியதைப் போல் தற்போதைய சூழ்நிலையில் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் தனது வாக்கு வங்கியை உயர்த்துவதற்கும் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி மன்ற தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். இதை காங்கிரஸ் மேலிடம் ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறது. இதனால் காங்கிரசுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்படுமே தவிர திமுக இரண்டு பக்கமும் லாபம் ஏற்படும் வாய்ப்பை காங்கிரசே உருவாக்கி தருவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்று மொத்த காங்கிரஸ்காரர்கள் எழுப்புகிறார்கள். இந்த சூழ்நிலையில் காங்கிரசில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும், வெறுப்புணர்வையும் சீர்ப்படுத்தி சரி செய்வதற்காக சமாதானம் ஏற்பாடு செய்வதற்காக கேரளாவில் இருந்து பார்வையாளர்களாக ரமேஷ்ஜென்னிதாலா அவர்களை உள்ளாட்சி மன்ற பார்வையாளராக அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி திமுக கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். திமுக கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும் எதிர்த்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டு தலைமைக்கு நிரந்தர கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தேவைப்பட்டால் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும். இல்லையென்றால் கூட்டணியை விட்டு தூக்கி எறியும். அப்பொழுது கூட திமுக கூட்டணி வேண்டும் என்று சிதம்பரம், பீட்டர்அல்போன்ஸ், கோபண்ணா போன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியோடு இருந்த கூட்டணியை விரும்புவார்கள். ஆக தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து இயங்குவதை விட திமுகவோடு இயங்குவதையே தலைவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் வேறு வழியில்லாமல் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுகவில் ஊது குழலாக செயல்படுவதையே திமுகவும் விரும்புகிறது. தோழமை உணர்வோடு காங்கிரஸ் கட்சியை திமுக வழிநடத்த விரும்பவில்லை என்பதை இந்த தேர்தல் இடஒதுக்கீட்டு மூலம் வெளிப்படுத்துகிறது. இதன் எதிரொலியாக தான் புதுக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ராமச்சந்திரன் மகன் திமுகவினரோடு தகராறு செய்துவிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதே போல் கரூர் மாவட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களால் விரட்டியடிக்கப்பட்டார். அதே போல் ஒசூரில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரும் அதிருப்தி அடைந்து அடுத்து வேட்பாளர்களை நிறுத்துகின்ற அளவிற்கு சென்றுவிட்டார்கள்.

இப்படி பல மாவட்டங்களில் காங்கிரஸ்காரர்களை முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் அவமானப்படுத்துகின்ற அளவிற்கு திமுக மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்திக்கும், எதிர்ப்பு நிலைக்கும் வந்துள்ளார்கள். இதன் எதிரொலியாக வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து செயல்படுவதையும் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்துவதைப் போல் அமைந்துள்ளது என்று புலம்புகிறார்கள். இது குறித்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏற்கனவே சூடு கண்ட பூனையாக அவர் இருப்பதால் இப்பொழுது மௌனமாக இருந்து வருகிறார்கள். தப்பி தவறி கண்டனம் தெரிவித்தால் அல்லது கண்டன குரல் எழுப்பினால் மறுநாள் திமுக தலைமையிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடம் உத்தரவு விடூம் என்பதால் அதிர்ந்து பேசும் அழகிரி அமைதியாக இருக்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்வது குறித்து முதல்வரும் திமுக தலைவரும் என்ன செய்யப்போகிறார் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

- டெல்லிகுருஜி