சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில்
வெற்றி யாருக்கு?
இறுதி கள நிலவரம்நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி தேர்தலிலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருப்பது சென்னை மாநகராட்சி மட்டுமே.

எல்லா மாநகராட்சி மேயர்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் சென்னை மாநகராட்சியை கைப்பற்றியே தீருவது என்பதில்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மல்லு கட்டுகின்றன.

மக்களின் எதிர்பார்ப்பும் சென்னை மாநகராட்சி மீதுதான் அதிகமாக உள்ளது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்திலேயே பணக்கார மாநகராட்சியும், மிகப்பெரிய மாநகராட்சியும் இதுதான்.

இங்கு மேயராக வருபவர் மந்திரி போலவும், கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் எம்.எல்.ஏ.க் களை போலவும் மக்களால் பார்க்கப்படுகிறார்கள்.

ஆண்டுக்கு ரூ.700 கோடி சொத்து வரி வசூல், ரூ.2,500 கோடிக்கு அதிகமாக பட்ஜெட் போடுவது உள்பட செல்வம் கொழிக்கும் மாநகராட்சி. ஒரு சிறு குட்டி அரசாங்கம் போலவே செயல்படும் என்பதால் சென்னையை குறி வைக்கிறார்கள்.

தேர்தல் களத்தில் 2,670 வேட்பாளர்கள் உள்ளார்கள். இதில் அ.தி.மு.க. 200 வார்டுகளிலும், நாம் தமிழர் 199, பா.ஜனதா 198, பா.ம.க. 194, அ.ம.மு.க. 189, மக்கள் நீதி மய்யம் 176, தி.மு.க. 167, சுயேட்சைகள் 954 பேர் ஆவார்கள்.

இவர்களில் கடும் போட்டி தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே என்பதுதான் கள நிலவரம். அ.தி.மு.க. 200 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 16 வார்டுகள், விடுதலை சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5, இந்திய கம்யூனிஸ்டு 3, ம.தி.மு.க. 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே தேர்தல் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு கவுரவ பிரச்சினை. வெற்றி என்பதை விட மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு பிறகும் வலுவான கட்சி என்பதை நிலைநாட்ட போராடுகிறது.

பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகி தனியாக நிற்பதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான சிறுபான்மை ஓட்டுகள் சிதறாது என்று அக்கட்சி கருதுகிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி நடுநிலை வாக்காளர்களும் மு.க.ஸ்டாலின் ‘சிறந்த முதல்-அமைச்சர்’ என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

அதே நேரம் அடிமட்டத்தில் மக்கள் விருப்பங்களுக்கு மாறாக நடைபெறும் சம்பவங்கள் மக்களை நெளிய வைக்கிறது.

உதாரணத்துக்கு வணிகப் பகுதியான தி.நகரில் நடைபாதை கடைகள் அதிக அளவில் முனைத்து இருப்பதை சுட்டி காட்டுகிறார்கள்.

பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகள் தனித்து நிற்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாக்குகள் பிரிந்து வெற்றி வாய்ப்புள்ள பிரதான கட்சி வேட்பாளர்களை வீழ்த்தவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் முன்னணி கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காததால் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களாலும் சிலரது வெற்றி வாய்ப்பு பறி போகலாம்.

துணிந்து தனியாக தேர்தலை சந்திக்கும் பா.ஜனதா தரப்பிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறி வைத்து பிரசாரத்தில் முனைப்பு காட்டுகிறார்கள். நினைத்ததை விட அதிகமாகவே வாக்குகளை பிரித்து விடுமோ என்ற அச்சம் இரு கட்சிகளிலும் உள்ளது.

மயிலாப்பூர், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, துறைமுகம், திருவொற்றியூரில் பா.ஜனதா வேட்பாளர்கள் சவாலாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ஒரு சில இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்ற மன வருத்தமும் கட்சியினரிடையே இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட எல்லா தலைவர்களுமே சென்னையை முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய தவறவில்லை.

மாநகராட்சி பகுதியில் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வினரே எம்.எல்.ஏ.க்களாக இருப்பதால் தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஜெயிக்க வைப்பதற்காக கடுமையாக போராடுகிறார்கள்.

அ.தி.மு.க.விலும் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் பலமிக்கவர்களாக போட்டியை சந்திக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய மாநகராட்சிக்கு முதல் முதலாக பெண் ஒருவரை அதிலும் தலித் பெண் ஒருவரை மேயராக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய 16 வார்டுகள் தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் பெண்களில் ஒருவரே மேயராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் பொது வார்டுகள் சிலவற்றிலும் தலித் பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே வெற்றி பெற்ற பிறகே மேயர் வேட்பாளரை கட்சிகள் முடிவு செய்யும். முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் இரு கட்சிகளிலும் மேயர் பதவிக்கு தேர்வு செய்வதற்காகவே ஒருசிலரை களத்தில் இறக்கி இருக்கிறார்கள்.

முன்னணியில் தி.மு.க. இருக்கிறது என்றாலும் பலமான போட்டியாளராக அ.தி.மு.க.வும் மல்லு கட்டுவதை மறுக்க முடியாது. அரசியல் கட்சிகளும், அரசியல் ஆர்வலர்களும் இதை கணித்தாலும் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவர்கள் மக்கள். அவர்கள்தான் நாளை மறுநாள் முடிவு செய்யப்போகிறார்கள்.