10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை





தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வருகின்றனர்.

ஒமைக்ரான், கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ந்தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் பாடத்திட்டங்களை விரைவாக முடித்து 2-வது கட்ட திருப்புதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

வருகிற நாட்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கி இறுதியில் முடியும். அதனைத்தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் மாத மத்தியில் முடியும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தாலும் பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு தீவிரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது? ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடுவதா? தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் உள்ள இந்த காலகட்டத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் பிளஸ்1 பொதுத்தேர்வு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.