நேர்மையான எங்கள் வேட்பாளர்களை
வெற்றி பெற செய்யுங்கள்
கமல்ஹாசன் வேண்டுகோள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டு வருகிறார்.
3-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
தாம்பரம், மதுரை மாநகராட்சி வார்டுகள் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகப்பட்டினம், நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. திட்டக்குடி பேரூராட்சியில் ஒரே ஒரு வார்டில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளரின் பெயரும், கமல்ஹாசன் வெளியிட்ட பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அத்துடன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து டுவிட்டர் பதிவு ஒன்றையும் கமல் போட்டுள்ளார். அதில், கூறி இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3-வது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை பெற செய்யுங்கள்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறும் போது, “எங்கள் தலைவர் கமல்ஹாசன் இதன் மூலம் பிரசாரத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்தனர்.
பொதுமக்களை நேரடியாக சென்று பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு பிரசாரத்தை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். அவரது சுற்றுப்பயண விபரங்கள் தயாராகி வருகிறது.