எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் சசிகலாவின் சபதம்!
மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வசித்து வந்த ராமாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்ல வீட்டிற்கு சென்ற அவர் எம்.ஜி.ஆர் வசித்த அறைக்கு சென்று அந்த அறையில் போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மட்டுமே பயன்படுத்தி வந்த நாற்காலியில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் தனது முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். எம்.ஜி.ஆர் அமர்ந்த நாற்காலியில் நான் அமர விரும்பவில்லை என்று கூறிய போதிலும் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் வற்புறுத்தலின் பேரில் எம்.ஜி.ஆர் நாற்காலியில் அமர்ந்த சசிகலா தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி கருத்துக்களை பதிவிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன் தனது எதிர்கால அரசியல் குறித்து சில விளக்கங்களை வெளியிட்டார். கொரனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்த நிலையில் விரைவில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை செய்து வருவதாகவும் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதற்கு பாடுபடப்போவதாகவும் கூறி சென்றுள்ளார்.
- கண்ணன்