குடியரசு தினவிழா கொண்டாட்டம்:
அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி



சென்னை:

73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நாளை (26-ந்தேதி) நாடு முழுவதும் நடக்கிறது. தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகில் நாளை குடியரசு தினவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசிய கொடியை ஏற்றுகிறார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முன்பு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலையில் போர் நினைவுச் சின்னத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசிய கொடியை ஏற்றுகிறார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்துள்ளன.


கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்கிற நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்கள், பொது மக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் தொலைக் காட்சி மூலம் குடியரசு தின விழாவை கண்டு ரசிக்கலாம்.

ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும் பள்ளி- கல்லூரி மாணவிகள், தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் பிற மாநில கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் முப்படைகளின் வீரத்தை பறைசாற்றும் ஊர்திகள், தமிழக அரசுத்துறைகளின் செயல்பாடுகள், திட்டங்களை விளக்கும் ஊர்திகள் இடம் பெற உள்ளன.

குடியரசு தினவிழா நடைபெற உள்ள சென்னை காமராஜர் சாலையில் நாளை (26-ந்தேதி) அதிகாலை முதல் விழா நிறைவடையும் நேரம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் சி.சரத்கர் ஆகியோரின் அறிவுரையின் பேரில் காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரம் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.