நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இறுதி கட்ட ஆலோசனை- விரைவில்
அறிவிப்பு வெளியாகிறதுகடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக உருவானதால் அந்த மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.

புதிதாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வார்டுகள் பிரிக்கும் பணி நடந்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், “ஜனவரி 31-ந்தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என கெடு விதித்தனர்.

இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வார்டு வரையறை செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆண்கள், பெண்கள் வார்டு, எஸ்.சி,எஸ்.டி. வார்டுகள் பிரிக்கும்பணி நடைபெற்று வந்தன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கேற்ப வார்டுகளை பிரிக்கும்பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்தது. கடந்த 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அது மட்டுமின்றி பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்தும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகள் என ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் தேர்தல் முன்ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனித்தனியாக தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிதாக வார்டு மறுவரையறை செய்யப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று பிற்பகல் இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். மதியம் 3.30 மணிக்கு சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட 18 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் 4.30 மணிக்கு திருவண்ணாமலை, சிவகங்கை, விருதுநகர் உள்பட மீதமுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

வார்டுகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அனுப்புவது தொடர்பாகவும், வாக்குச்சாவடிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தவது குறித்தும், கொரோனா காலம் என்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை எப்படி நடத்துவது என்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை மாநகரில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் வார்டு அடிப்படையில் பெண்கள் வார்டுகளை பிரிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது.

இந்த பணிகள் ஒரு வாரத்தில் முடிந்து விடும். இதனால் பொங்கலுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் (பிப்ரவரி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.