வன்னியர் பொதுச்சொத்து
நல வாரியத்தின் சீரிய பணிகள் நடப்பது என்ன? நடந்தது எவை…?

தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம் அமைத்திட அதற்கென தனிச் சட்டம் 2018-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு 2019-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கான முயற்சிகள் முதலில் 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, அது நிறைவடையாமல் அதற்குப் பிறகு 2009-ஆம் ஆண்டு, அந்த முயற்சிகள் தொடர்ந்தன. அப்போதைய திமுக அரசால் தனி அலுவராக ஜி.சந்தானம் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவரால் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது.

இந்த வாரியத்திற்கான ஒரு தனிச்சட்டம் ஒன்று இந்திய வக்ஃபு வாரியச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை ஓய்வு பெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பூபாலன் அவர்கள் வாரியத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தார்.

பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த வாரியத்தில் ஜி.சந்தானம் இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலாளர் ஆ-.கார்த்திக் இ.ஆ.ப., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் டாக்டர் மா.மதிவாணன், தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறையின் சிறப்பு செயலாளர் ப.மகேஸ்வரி என்று மூன்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மோகன்தாஸ், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அறக்கட்டளையின் பிரதிநிதியாக சேலம் கண்டர் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் சோமசுந்தரம், மற்றும் சிறப்பாக சமூகப் பணியாற்றியவர்கள் டாக்டர் சஞ்சீவி, பொறியாளர்கள் சி.சுப்பிரமணியன், தியாகராஜன், தாமரை மற்றும் அருணாசுந்தரி என்று மொத்தம் 14 பேர்கள் இதில் இடம் பெற்று உள்ளனர். அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரியாக, நில நிர்வாகத்துறையில் இணை ஆணையராக உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அவர்கள் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் 44/2018 இன் ஒவ்வொரு அறக்கட்டளையையும், வாரியத்தின் சர்வே அலுவலர் புலத்தணிக்கை செய்து, அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உரிய அறிவிப்பு கொடுத்து, அதன் சொத்துக்களின் ஆவணங்களைச் சேகரித்து, அதனை வாரியக் கூட்டத்தில் வைத்து, பதிவு செய்து, அந்த சொத்துக்களின் விவரங்களை அரசாங்க கெஜட்டில் வெளியிட வேண்டும்.

ஆரம்ப கட்ட சர்வேயில் 75 சொத்துக்கள் என்றிருந்த, இந்த வன்னியர்களது அறக்கட்டளைகள், தற்போது மாவட்டந்தோறும் ஆய்வு செய்ததற்குப் பிறகு, 118 சொத்துக்கள் என்று உயர்ந்துள்ளது. அதிலே 63 அறக்கட்டளைகள் தற்போது, வாரியத்தில் சட்டப் பிரிவு 30இன் கீழ் பதியப்பட்டுள்ளன. இதில் பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, சேலம் எஸ்.கந்தசாமி கண்டர் அறக்கட்டளை, மற்றும் திண்டிவனம் வன்னியர் கல்வி அறக்கட்டளை ஆகியவை அடங்கும், பதியப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் 14 அறக்கட்டளைகளின் சொத்துக்களை புலம் வாரியாக தணிக்கை செய்யப்பட்டு அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

மாவட்ட வாரியாக கணக்கெடுத்தபின், வாரியத்தில் பதியப்பட்டள்ள பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் கீழ் மொத்தம் 36 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 13 பள்ளிக்கூடங்களும், 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 2 பொறியியல் கல்லூரிகளும், ஒரு சட்டக் கல்லூரியும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், இரண்டு ஐடிஐ-களும் இதில் அடங்கும்.

இந்த வாரியம் துவங்கப்பட்ட பிறகு, ஆக்கிரமிப்பில் இருந்த பல்வேறு சொத்துக்கள் இனங்காணப்பட்டு, அவை கையப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, சமூக விரோதி சக்திகளின் பிடியில் இருந்த, பி.டி.லீ.செங்கல்வராய அறக்கட்டளைக்குச் சொந்தமான, இராயப்பேட்டையில் உள்ள 12.6 கிரவுண்டு நிலம் கைப்பற்றப்பட்டது. பாராட்டத்தக்க சாதனையாகும். அதன் மதிப்பு சுமார் 87 கோடி ரூபாய்.

அதுபோல, திருவொற்றியூரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வன்னியர் மகா சங்கத்துக்கான சொத்து, ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலின் பேரில், பத்திரப்பதிவுத் துறையில் பதியப்பட்ட ஆவணங்களை இரத்து செய்கின்ற நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது.

இந்த வாரியத்தில் நிர்வாகத்தில் உள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

1945 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால், இந்து அறநிலையத் துறைக்கு நிர்வகிக்க அளிக்கப்பட்ட அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளையை இந்த வாரியத்தில் சேர்க்க வேண்டுமென்ற பரிந்துரை தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டு, அதன் பரிசீலனையில் உள்ளது. முதற்கட்டமாக ஆளவந்தார் அறக்கட்டளையை வாரியத்தில் பதிவதற்கான முடிவு அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களது முதல் அறக்கட்டளையான ஆறநேரி கோவிந்து நாயக்கர் அறக்கட்டளை 2017 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளையிடமிருந்து பிரிந்த போதிலும், ஓய்வு பெற்ற நீதியரசரின் பொறுப்பில், சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி இயங்கி வருகிறது. அந்த வழக்கில் பிரதிவாதியாக தன்னை இணைத்துக் கொண்டு, பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை எடுத்ததைப் போல, தமிழக அரசின் கண்காணிப்பில் கொண்டு வர தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மூலமாக அந்த வழக்கை வாரியம் நடத்தி வருகிறது. விரைவில் அதற்கான நல்ல தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

சீர் மரபினர் நல வாரியம் போன்று, வன்னியர்களக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும், முஸ்லீம் மகளிர் உதவி கழகம் போன்று வன்னியர் மகளிர் உதவிக் கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரையையும், அரசு கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில் உள்ளது போன்று, வன்னிய அறக்கட்டளைகள் நடத்தும் சுயநிதிப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளை எவ்வித நிபந்தனையுமின்றி தொடங்கி நடத்த வேண்டும் என்ற பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் ஆய்வில் உள்ளன.

வேலூரில் உள்ள வட ஆற்காட்டு வன்னியர் சங்கத்தின் மூலமாக, அரசுப் பணிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அது போன்று இதர அறக்கட்டளைகளிலும், ஆரம்பித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அமலாக்கம் கொரனா பெருந்தொற்றால் தடைபட்டுள்ளது.

சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ள சமூகக் கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களை கட்டி முடித்திட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற அனுபவத்தைக் கொண்டு, தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் சட்டம் 2018க்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் குறித்த வரைவு சட்டத்திருத்தம் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசில் பரிசீலனையில் உள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக, கொரனா சமூகத் தொற்றுக்கிடையிலும், வாரிய அலுவலர்களால் தொடர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 16 முறை வாரியத்திற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வாரியத்தின் பணிகள் தொய்வு இன்றி நடைபெற்று வருகின்றன.

இதை புரிந்துக் கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு உழைப்பவர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சமூகப் பணி சமுதாய பணி இரண்டும் கேள்விக்குறியாக மாற்றிவிடும். பிறகு நமக்கு கிடைத்திருப்பதும், மாற்றார் வசம் சென்று விட்டால் நம் சமுதாயம் வளர்ச்சி என்பது தடைப்படும்.

- வன்னியர் நலவிரும்பி