5 மாநில சட்டசபை தேர்தல் - 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும்

   புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவி காலம் மே மாதம் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவிக்காலம் மார்ச் மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைகிறது.

60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை மற்றும் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் இறுதியில் முடிவடைகிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலும் விரிவான தயாரிப்புகளுடன் அதிகபட்ச வாக்காளர் வாக்களிக்கும் வகையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். வெளிப்படையாக தேர்தல் நடத்தப்படும். 

ஐந்து மாநிலங்களிலும் ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மொத்தம் 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8.5 கோடி பேர் பெண்கள் ஆவர். 5 மாநிலங்களிலும் சுமார் 11 லட்சம் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 6 மாத காலமாக தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்தோம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சானிடைசர்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வசதிகள் செய்யப்படும். கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும். தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபேட் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. 

வேட்பாளர்களின் செலவுத்தொகை வரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் செலவுத்தொகை 28 லட்சம் ரூபாயாக இருக்கும். தேர்தலை காரணம் காட்டி மதுவோ, பணமோ அன்பளிப்பாக வழங்குவது தடை செய்யப்படுகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நல்ல முறையில் தேர்தலை நடத்துவது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.