சேலத்திற்கு வந்தது
என் வீட்டுக்குவந்தது போன்ற
பெருமை ஏற்படுகிறது-
மு.க. ஸ்டாலின் பேச்சு


   


நானும் அமைச்சர்களும் செல்லும் இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், முத்துச்சாமி, எ.வ.வேலு, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. , சேலம் மாநகராட்சி கமி‌ஷனர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநில அளவில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் தொடங்கப்பட்ட திட்டங்கள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.261 கோடியே 39 லட்சத்தில் திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு உள்ளன. ஒரே விழாவில் 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்திற்கு ரூ.1242 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்க உள்ளேன்.

சேலம் அம்மாபேட்டையில் ரூ.120 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

மக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.

சேலத்திற்கு வந்தது என் வீட்டுக்கு வந்தது போன்ற பெருமை ஏற்படுகிறது என்று தெரிவத்துள்ளார்.

நானும் அமைச்சர்களும் செல்லும் இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள நேரு, வந்தார் வென்றார் என்ற நிலை வரும்.

கூட்டு குடிநீர் திட்டம், பெரியார் பல்கலை. சேலம் உருக்காலை உள்ளிட்ட திட்டங்களை திமுக கொண்டுவந்தது.

திராவிட இயக்க வரலாற்றில் பெரும் பங்கு வகித்த இடம் சேலமாகும்.

வறுமை குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.

திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு நான் மீண்டும் மீண்டும் வருவேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.