இலவச அரசியலுக்கு முற்றுப்புள்ளி...!
இளைஞர்கள் அரசியலே எதிர்காலம்!    


இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய அரசியல் அத்தியாயம் தமிழகத்தில் தொடங்குகிறது. 

நேற்று வரை அரசியலில் எந்த கட்சி, எந்த சாதி என்று இருந்த நிலை மாறி தற்பொழுது இந்த கட்சி தான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று புதிய திசையை நோக்கி இளைஞர்கள் கூட்டம் பயணம் செய்ய தொடங்கியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இமெயில், யூடிப் போன்ற மின்னணு காட்சி தொடர்புகள் மூலம் அன்றாட அரசியலையும், சமூக பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதும், சுட்டிக்காட்டுவதும் இளைஞர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விரல் நுனியில் உலகத்தை கொண்டு வந்து அரசியல்வாதிகளுக்கும், சமூக சேவகர்களுக்கும் தகவல்களை தெரிவித்து உண்மை நிலவரத்தை படம் பிடித்து காட்டுகிறார்கள். உலகம் முழுவதும் பரவி கிடக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் உள்ளங்கையில் அரசியலை கொண்டு வந்து தமிழ்நாட்டு அரசியலையும், இந்திய அரசியலையும் தெளிவாக விவாதம் செய்கிறார்கள். சட்டப் பிரச்சனைகள் உள்பட சமுதாய பிரச்சனைகள் வரை தயக்கமின்றி சுட்டிக்காட்டுகிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் சமுதாயம் பொதுமேடை விவாதம் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆர்வமுடன் செயல்படுகிறார்கள்.


அரசாங்க சலுகைகளுக்கு கையேந்தி நிற்கும் நிலையை மாற்றி உழைத்து சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வாணிபம், சுயதொழில் போன்றவைகள் மூலம் பொருள் ஈட்டி புகழோடு வாழ நினைக்கிறார்கள். இதுமட்டும்மல்ல இலவசங்களுக்கு ஏங்கி நிற்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை தூக்கிப் பிடிக்கவும், ஓங்கி உரக்க குரல் எழுப்புகிறார்கள். கடன் தொல்லைகளால் அவதிப்படும் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை சுரண்டி பிழைக்கும் முதலாளித்துவ ஏகாதிப்பத்தியத்தை தட்டிக்கேட்டு நியாயம் பெறவேண்டும் என்று துடிக்கிறார்கள். அரசியல் ஆதிக்கம், அரசியலில் ஆக்கிரமிப்பு இவைகளை ஒழித்து புதிய அரசியல், புதிய சித்தாந்தம் போன்ற அடிப்படை கோட்பாடுகளை வடிவமைத்து தனிமனித வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கு தேவையான முயற்சிகளையும் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக முன்னேற புதிய யுத்திகளை உருவாக்கி தங்களை தாங்களே நடைமுறைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள். 


பொதுநலத்தை மறந்து சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி சொர்க்க வாழ்க்கை வாழ நினைக்கும் அரசியல்வாதிகளை முற்றிலும் அரசியலில் இருந்து விலக்கி விடவும், அதற்கான ஏற்பாட்டினை செய்வதற்கு இன்றைய இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் அவரவர் இருக்கும் திசையில் இருந்து நாட்டுப்பற்று, தேசப்பற்று இவை இரண்டையும் பாதுகாத்து சமுதாய உணர்வுடன் புதிய சகாப்தம் படைக்க நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என்று இன்றைய ஊழல்வாதிகளுக்கு சவால் விடுகிறார்கள். இதை புரிந்துக் கொண்டு அரசியல்வாதிகள் இலவசங்கள் மூலம் மக்களை கவர்வதற்கு கவர்ச்சிக்கரமான திட்டங்களை தீட்டாமல் சலுகைகளை காட்டி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்காமல் மக்களின் ஏதார்த்தங்களை அறிந்து புரிந்து அரசியல் நடத்துங்கள் என்று எச்சரிக்கை விடும் விதமாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.  இந்த நிலை தொடர்ந்தால் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சி முறை என்ற நிலையை மாற்றி, நல்லவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் நிலையை இன்றைய இளைஞர்களால் உருவாக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் உரிமைகளையும், தேவைகளையும் புறம் தள்ளிவிட்டு தங்கள் சுயநலத்திற்காக நடக்கின்ற எந்த இயக்கத்தையும் இன்றைய இளைஞர்கள் புறக்கணித்து விடுவார்கள் அல்லது தூக்கி எறிந்துவிடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை சினிமா துறையோ அல்லது திரைப்படமோ தமிழக அரசியலில் இனி ஆதிக்கம் செலுத்த முடியாது. மாறாக இளைஞர்கள் கையில் தமிழக அரசியல் என்பதே எதிர்காலமாம்.


-டெல்லிகுருஜி