கோயம்பேடு புதிய மேம்பாலத்தை 1-ந்தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


  


கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 2018 ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. அதனை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை கட்டப்பட்டுள்ளது.

புதிய மேம்பால பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இன்று திறப்பதாக இருந்த நிலையில் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை காலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் பஸ்கள் செல்ல வசதியாக புதிய மேம்பாலம் தற்போது திறக்கப்படுகிறது.

புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் அந்த சாலையை கடக்கின்றன. இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு வழியாக மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய சந்திப்புகளில் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.

கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம், செங்குன்றம் மார்க்கத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதேபோல அந்த பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கிண்டி மார்க்கத்திற்கு எளிதாக கடந்து செல்ல முடியும்.

60 முதல் 65 சதவீதம் வாகனங்கள் நேரடியாக மேம்பாலம் வழியாக இனிவரும் காலங்களில் கடக்க முடியும். எனவே புதிய மேம்பாலம் திறப்பின் மூலம் கோயம்பேடு 100 அடி சாலையில் இனி நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.