சட்டத்தை மீறிய சலுகையா? வென்றது வேதாந்தா குழுமம்! அனைத்து கட்சி முடிவு மக்கள் நலனில் அக்கறையா?

 சட்டத்தை மீறிய சலுகையா? வென்றது வேதாந்தா குழுமம்!
அனைத்து கட்சி முடிவு மக்கள் நலனில் அக்கறையா?


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வேதாந்தா இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் முதன்மையானவர். உலகம் முழுவதும் இவருக்கு தொழிற்சாலைகள் மற்றும் பல ஆலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை காப்பர் தயாரிப்பதற்கு என்று பிரேத்தியேகமாக தொடங்கப்பட்ட ஆலையாகும். இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு வாயுகள் மனித உயிருக்கு ஆபத்தானவை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, வாதாடி அந்த ஆலையை மூடுவதற்கான ஏற்பாட்டினை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும் சமூக சேவை அமைப்பினரும் உறுதியாக நின்று தமிழக அரசிற்கு கொடுத்த அழுத்ததிற்கு காரணமாக சட்டப்படி ஆலை மூடுவதற்கு தமிழக அரசு முன்வந்தது. இந்த ஆலையை மூடுவதற்கான போராட்டத்தில் பல உயிர்கள் பலியாகின. அவைகளையும் மீறி தற்பொழுது சட்டப்படி போடப்பட்ட ஆலை திறப்பதற்கான அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.


இந்தியா முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற ஒரு காரணத்தை முன்வைத்து வேதாந்தா நிறுவனம் இந்த அனுமதியை பெற்றுள்ளது. அதே நேரம் மத்திய அரசு தீர்வுகாண வேண்டிய ஒரு பிரச்சனைக்காக தமிழ்நாடு மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் மனிதாபிமான அடிப்படையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதாக  அனைத்து கட்சி தீர்மானம் 

தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் அனுமதி வழங்கி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்டத்தை தனக்கு சாதகமாக வளைக்கும் திறமையும் அரசியல் ஆதரவும் வேதாந்தா நிறுவனத்திற்கு உண்டு என்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற இந்த தருணத்தில் இப்படி ஒரு அனுமதியை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசும் தமிழக எதிர்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மக்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கான மனிதாபிமானம் செயல் என்று சொல்லி தூத்துக்குடி மாவட்டம் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆலையை திறந்து ஆக்ஸிஜன் தயாரிப்பது என்பது மாவட்ட நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி மற்றும் அதன் தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கேற்று தமிழக அரசின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பது சட்டத்திற்கு மீறிய செயலா அல்லது சமரசத்தின் பெயரில் ஏற்பட்ட அனுமதியா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசியல் கட்சிகளான வைகோ, திருமாவளவன், சீமான், நடிகர் கமலஹாசன், வேல்முருகன், பமக போன்ற கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லையென்றாலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருதலைப் பட்சமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இருந்தாலும் திமுக ஆட்சி அமைந்தப் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்கான நான்கு மாத அவகாசம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையை விட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தால் திமுகவை பாராட்டலாம். 


தமிழக அரசு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பதாக கூறியிருப்பது மக்கள் போராட்டத்தை கண்காணிக்கவா, ஆக்ஸிஜன் பணியை மட்டும் கண்காணிக்கவா என்ற கேள்வி எழுகிறது. அரசு நடுநிலையோடு இந்த விஷயத்தை சிந்தித்திருந்தால் கண்காணிப்பு குழுவின் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களாக நியமித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. 


வேதாந்தாவிற்கு ஏற்பட்ட வெற்றியா! தமிழக மக்களுக்கு ஏற்பட்ட தோல்வியா என்பது போக போகத் தான் தெரியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதே சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பதாக அமையும்.

& டெல்லிகுருஜி