அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.பா.ஜனதா கூட்டணியை உறுதிசெய்து அ.தி.மு.க. தலைவர்கள் இருவரும் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவின் சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் திட்டப்பணிகள் குறித்து பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்துகிறார். தமிழகத்துக்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுக்களையும் முதல் அமைச்சர் அளிக்க உள்ளார்.

வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரெயில் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

காவிரிகுண்டாறு இணைப்பு திட்டத்துக்காக கரூர்புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

கங்கை நதியை சுத்தப்படுத்தியது போல காவிரி நதியையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நடந்தாய்வாழி காவிரி என்கிற திட்டத்துக்கும் நிதி உதவியையும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோருகிறார். இந்த அரசு முறை சந்திப்புகள் முடிந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-சாமி