அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற்றப்படுகிறதா? ராமதாஸின் இடஒதுக்கீட்டு போராட்டம் எடுபடுமா?

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற்றப்படுகிறதா?
ராமதாஸின் இடஒதுக்கீட்டு போராட்டம் எடுபடுமா?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்ற நிலையில் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் டாக்டர் ராமதாஸ் முன் வைத்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து வந்தார். காலதாமதம் செய்வதில் கவனமாக இருந்து வருகிறார். இருந்தாலும் ஒப்பந்தப்படி டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசுக்கு நாடாளுமன்ற மேல்சபை பதவியை வழங்கியது அதிமுக அரசு. இதற்குப் பிறகு பாமகவின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்வரவில்லை . நாம் (அக்னிமலர்கள்) ஏற்கனவே கூறியுள்ளப்படி பாஜக கட்சி கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது. ஆனால் தோழமை கட்சிகளான பாமக கட்சி மற்றும் தேமுதிக கட்சிகளை கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த இரு கட்சிகளும் விரும்பினால் அதிமுக பாஜக கூட்டணியில் தொடரலாம். விரும்பவில்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்கின்ற நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பாஜக கட்சி கூட்டணியை விரும்பி ஏற்றுக்கொண்ட அதிமுக பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை புரிந்துக் கொண்ட டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20% தனி உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் முதல் தேதியில் இருந்து போராட்டம் நடைபெறும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த போராட்டம் எந்த அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. காவல்துறையின் கணிப்புப்படி டாக்டர் ராமதாஸின் போராட்டம் அதிமுக அரசுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அளவில் ஆளுங்கட்சிக்கு சொல்லப்பட்டுள்ளது.


வன்னியர்கள் மத்தியிலும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் போராட்டத்திற்கு பெருமளவில் வரவேற்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் இடஒதுக்கீட்டு பிரச்சனையை எழுப்புவது உகந்த நேரமல்ல என்று நினைக்கிறார்கள். அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து கட்சி வன்னியர்களும். மாறாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களுக்கு எதிராக பின்னடைவை ஏற்படுத்துகின்ற அளவில் டாக்டர் ராமதாஸின் இடஒதுக்கீடு போராட்டம் அமைந்துள்ளதாக கருதுகிறார்கள். திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்ற நிலையில் உருவாக்கிய டாக்டர் ராமதாஸ் அந்த கூட்டணியில் தங்களுக்கு இடம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டு தற்பொழுது அதிமுக கூட்டணியிலும் நீடிக்க விரும்பவில்லை என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இன்னும் 6 மாதங்களில் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலை என்ன என்பதை தெரி விப்பதற்கு பதிலாக 1980-ல் வன்னியர் சங்கம் சார்பில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையை வலியுறுத்தி இப்பொழுது போராட்டம் நடத்துவேன் என்று முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் வன்னியர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என்பது வன்னியர்களின் புலம்பலாக உள்ளது.


ஒருவேளை டாக்டர் ராமதாஸ் அவர்களின் போராட்டம் தோல்வியுற்றால் அது வன்னியர்களின் எதிர்காலத்தை அரசியல் ரீதியாக கேள்விக் குறியாக்கும். ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்டால் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை புரிந்துக் கொண்ட டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருந்துக் கொண்டு அந்த கட்சிக்கு எதிராக தனது போராட்டத்தை அறிவிப்பது என்பது அதிமுக அரசு இட ஒதுக்கீடு வழங்காது என்பதை தெளிவாக தெரிகிறது.


அதிமுக அரசை அழுத்தம் கொடுத்து தனி உள் ஒதுக்கீடு பெறுவதற்கு பதிலாக போராட்டம் அறிவித்து வன்னியர்களை வீதிக்கு அழைத்து வருவது ஞாயமற்ற செயல் என்கிறார்கள். போகின்ற போக்கை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு திட்டமிடுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது.


- டெல்லிகுருஜி