திரை ரசிகர்களுக்கு திரை போடலாமா?

திரை ரசிகர்களுக்கு திரை போடலாமா?


தமிழக அரசியலில் திரைத் துறை நாயகர்கள் ஆதிக்கம் செலுத்தி ரசிகர்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தமிழ்நாட்டில் சினிமா உலகம் மெல்ல மெல்ல நளிவடைந்து கொண்டிருக்கும் தருணத்தில் தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட், பேஸ்புக், கணினி என்று சினிமா துறையை ஆக்கிரமித்துக் கொண்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதன் விளைவாக பல்வேறு திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாறி காட்சியளிக்கிறது. மல்டிப்பிளக்ஸ் தியேட்டர்கள் உருவாகி ஒரே இடத்தில் அமர்ந்து பல தியேட்டங்களை பார்க்கலாம். பல தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கலாம் என்ற நிலையில் புது புது மால்களில் சினிமா அரங்கங்கள் தோன்றியது.


தியேட்டருக்கு வந்து வரிசையில் நின்று கால்கடுக்க காத்திருந்து டிக்கெட் பெற்று சினிமா பார்த்த காலங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சில நட்சத்திர படங்களுக்கு விளம்பரம் செய்வதுண்டு. அந்த காலமும் மறைந்து போய்விட்டது. தற்பொழுது கல்லூரி மாணவர்கள் முதல், கல்லூரி மாணவிகள் வரை இளைஞர்கள் மட்டுமே இல்லத்தில் இருந்து திரைப்படம் பார்ப்பதை தவிர்த்து தியேட்டர்களை நாடுகின்றனர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள், கூடுதல் சம்பளம் பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கான செலவில் திரைப்படங்கள் தயாரித்து ரசிகர்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் கூடுதல் வருவாயை பெற்று முதலிட்டை இழந்து கதாநாயகன், கதாநாயகிகளுக்கு பேசிய தொகையை வழங்கி விட்டு மீதம் இருக்கின்ற பணத்தில் அரசாங்க வரி விதிப்புக்கு கப்பம் கட்டிவிட் திரைப்படம் விநியோகஸ்தர் சங்கம் விழிபிதுங்கி கொண்டிருக்கும் வேளையில் இயக்குனர் சங்கம் அரசுக்கு எதிராக எதிர்வினை ஆற்றி திரைக்கு வருவதற்கு தயாராக இருக்க கூடிய திரைப்படங்களை வெளியிடுவதற்கு தடை போடுகின்ற காலமாக உருவாகிவிட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தீபாவளி, பொங்கல் தங்கள் அபிமான திரைப்படங்கள் வெளியாகும் என்று ஆவலோடு காத்து கிடக்கிறார்கள். அதற்கும் தற்பொழுது முட்டுக்கட்டை போட்டாகிவிட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிடும் திரைப்படங்கள் குறைந்த வசூலை மட்டுமே பெறமுடிவதால் அவர்களும் இத்தகைய சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான திரையரங்குகள் சினிமா துறையை மட்டுமே நம்பி மாற்று தொழிலுக்கு போக முடியாமல் கொரனா காலங்களிலும் திரையரங்குகளை திறக்காமல் அடைத்து வைத்துக் கொண்டு போட்ட முதலுக்கு வட்டிகட்ட முடியாமல் அடுத்து எப்பொழுது திரைப்படத்தை வெளி யிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்கலாம் என்று பல்வேறு விதிமுறைகளை அறிவித்து அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. ஆனால் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே திரைப்படங்களை அனுமதிப்போம் என்று அரைகூவல் விடுகிறது. தியேட்டர் உரிமையாளர்களோ கோரிக்கைகளை தள்ளிவையுங்கள் என்று தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி தீபாவளி அன்று புதிய திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிதாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறது. அடம் பிடிக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் பிடிவாதத்தை தளர்த்தாமல் அரசை பணிய வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.


சீர்மிகு சினிமா துறை மெல்ல மெல்ல தன் மேனியை சிதைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து சினிமா தயாரிப்பை குறைத்து நடிகர் நடிகைகள் சின்னதிரைக்கு இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சினிமாதுறை சீரழியாமல் பாதுகாக்கின்ற பணியை தமிழக அரசும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள், ஒருவரையொருவர் சமரசம் செய்துக் கொண்டு பிடிவாதங்களை தளர்த்தி திரைக்கு வர தயாராக உள்ள திரைப்படங்களை வெள்ளித் திரையில் வெளியிட்டு சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் சினிமா உலகம் குறிப்பாக தமிழ் சினிமா உலகம் வெகு விரைவில் மூடு விழாவை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.


வெள்ளித் திரைக்கு திரைப்போடலாமா? ரசிகர்களுக்கு ஏமாற்றமா?


- டெல்லிகுருஜி