ஊராட்சிகளில் தீண்டாமை ஏன்? சாதி மோதலை தவிர்த்து சாதித்து காட்டுவோம்!

ஊராட்சிகளில் தீண்டாமை ஏன்?
சாதி மோதலை தவிர்த்து சாதித்து காட்டுவோம்!


தமிழகம் முழுவதும் சட்டமன்றம், நாடாளுமன்றம், ஊராட்சி மன்றங்களில் பட்டியல் இனம் (ஆதிதிராவிடர்) மக்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், உள்ளாட்சி மன்றமாக இருந்தாலும், ஊராட்சி மன்றங்களிலும் ஆதிதிராவிடர் மக்கள் மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். இத்தகைய சூழலில் அரசியல் சட்டப்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும்.


பொது தொகுதி அரசியல் கட்சிகள் விரும்பினால் பட்டியல் இன சமுதாய மக்கள் விரும்பினால் தனி தொகுதிகளை தவிர்த்து பொது தொகுதிகளிலும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வேட்பாளர்களாக போட்டியிட முடியும். ஆனால் இதுவரை அதுபோன்ற வாய்ப்புகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் வழங்கியதுமில்லை . ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தங்கள் சார்ந்துள்ள இயக்கங்களில் வாய்ப்புகளை கேட்டுப் பட்ட சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையான சமுதாயங்களில் வசிக்கும் மக்கள் ஊராட்சி மன்றங்களில் தேர்வாகி பஞ்சாயத்து தலைவர்களாக வருகின்ற பொழுது அவர்களுக்கு உரிய மரியாதையும் அவர்களுக்கு இருக்கைகளும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பரவலாக எழுகின்றது. ஒரு சில இடங்களில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு குடியேற்றுகின்ற உரிமைகளையும் வழங்கப்படுவதில்லை. இன்னும் ஒரு சில இடங்களில் பட்டியல் இன சமுதாய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதியின் பெயரால் தரையில் அமரவைத்து அவமானப்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.


ஏன் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்ற பொழுது பட்டியல் இன சமுதாய தலைவர்களே தாங்களாகவே தாங்களை குற்ற உணர்வுகளுடன் தரையில் அமர்ந்துக் கொண்டு பணியினை மேற்கொள்வது பிறகு உயர்சாதியை சேர்ந்தவர்கள் இப்படி தங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்று புகார்கள் எழுவதுண்டு. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில சம்பவங்களை பார்க்கும் பொழுது திருவண்ணாமலை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், கோவை மாவட்டம், கடலூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் பட்டியல் இன மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நடைபெற்றதாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முருகேசன், அமிர்தம், சரிதா, ராஜேஸ்வரி போன்றவர்கள் பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.


இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி என்ற ஊர்களில் நடைபெற்ற அனுபவமும் உண்டு. இந்த நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்பதை கூர்ந்து கவனித்தால் அரசியல் இயக்கங்களில் ஆதிக்கம் பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு காரணமாகி வருகின்றது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்களை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் அடைவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு பட்டியல் இன ஆதிதிராவிட மக்களும் அரசியல்வாதிகளுக்கு பலியாகி விடுகிறார்கள் என்பதை தவிர வேறு இல்லை.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் சாதி பேதமின்றி தங்கள் பணியை தடையின்றி செய்வதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். குறிப்பாக கடந்த காலங்களை விட இப்பொழுது பட்டியல் இன மக்களும், தலித்துகளும், ஆதிதிராவிட மக்களும் அதிக அளவில் விழிப்புணர்வு பெற்று கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தங்கள் ஆளுமை திறனை வெளிப்படுத்துவதற்கு பல வழிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்ற பொழுது அதை பயன்படுத்திக் கொண்டு சாதி மோதல்களுக்கு வழிவகுக்காமல் தங்கள் கடமையை செய்வதற்கு உறுதியாக நின்று போராட வேண்டுமே தவிர சாதி சாயத்தை பூசிக்கொண்டு வசிக்கின்ற பகுதிகளில் பதவியை இழந்து சாதாரண நிலையில் ஊர்மக்களோடு இணைந்து வாழ்கின்ற ஒரு வாய்ப்பு ஏற்படுகின்ற பொழுது ஒருவிதமான குற்ற உணர்வுடன் வசிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடும் பொழுது பதவியில் இருந்ததை விட பதவி இல்லாத பொழுது அதிக அளவி பாதிப்புகளை உருவாக்கும். ஆகவே நல்ல நிர்வாகத்தை எங்களாலும் தரமுடியும் என்ற நிலையில் ஊர் மக்களோடும், பொதுமக்களோடும் நட்புடன் பழகி நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு சகோதர, சகோதரி மனபான்மையுடன் அதிகாரத்தில் இருக்கும் பொழுது தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.


அரசியல் கட்சிகளின் ஆதரவும், வெளிச்சம் போட்டு காட்டுகின்ற ஊடகங்களும் என்றும் எப்பொழுதும் சாதி மோதல்களுக்கு தீர்வு காணமுடியாது. நமக்குள் நாமே நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொண்டு பதவியில் இருக்கும் காலங்களில் அனைவருக்கும் நன்மை செய்கின்ற விதத்தில் பணியாற்ற வேண்டும். ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக்கொண்டு உரிமைகளை நிலைநாட்ட முயற்சிக்கும் பொழுது சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தங்கள் உரிமைகளுக்காக பட்டியல் இன தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் ஊராட்சி மன்ற பணிகளில் மக்களின் நன்மதிப்பை பெற்று நல்லாட்சியை நடைபெறுவதற்கு துணை நிற்க வேண்டும். அப்பொழுது தான் தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு வளர்ச்சியும் உயர்வும், புகழும் கிடைக்கும். இது ஒன்றே சாதி மோதல் வராமல் முட்டுக்கட்டையாக இருக்கும் வழியை உருவாக்கும். ஆகவே வாக்களித்த ஊர் மக்களும், பொதுமக்களும், அரசியல் இயக்கங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையை வழங்கி ஊர் பஞ்சாயத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


- பெருந்தமிழன்