எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் பாஜக! திமுகவை பலகீனப்படுத்தவா அல்லது பாஜகவை வளர்க்கவா!! எல்.முருகன் அதிரடி திட்டம்!! கலக்கத்தில் கழகங்கள்!

எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் பாஜக!
திமுகவை பலகீனப்படுத்தவா அல்லது பாஜகவை வளர்க்கவா!!
எல்.முருகன் அதிரடி திட்டம்!!
கலக்கத்தில் கழகங்கள்!


தமிழக பாஜகவின் தலைவர் முருகன் அறிவிக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் பல்வேறு ஊகங்களாக எழுப்பப்பட்டு யார் இந்த முருகன் என்று முணுமுணுத்தார்கள். அரசியல் கட்சியினர் முதல் பத்திரிகை ஊடகத்துறை வரை. மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக இப்படி ஒரு தலைவரை அறிவித்திருக்கிறதே என்று பாஜகவில் உள்ளவர் கூட முணுமுணுத்தார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் ஆர்எஸ்எஸ் பின்னணியை கொண்டவர் என்பது இப்பொழுது தான் பலருக்கு தெரியவந்துள்ளது. புலி பதுங்கி பாய்வதைப் போல் சில காலம் அமைதியாக இருந்த முருகன் சீறிப்பாய தொடங்கிவிட்டார். எடுத்த எடுப்பிலேயே திமுக கட்சியின் பக்கம் அவரது பார்வை திரும்பியது. அதன்படி திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தலைவராக இருந்த மு.க.செல்வம் போன்றவர்களை பாஜக பக்கம் இழுத்தார். அகில இந்திய பாஜக கட்சி தலைமையோ சபாஷ் போட்டது. இதனை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பக்கம் தனது பார்வையை திருப்பினார் முருகன்.


பிரபல திரைப்பட நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்திதொடர்பாளருமான நடிகை குஷ்பு பாஜக கட்சியில் சேர்க்கப்பட்டார். அதே போல் கர்நாடக மாநில ஐபிஎஸ் தேடராக பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான அண்ணாமலை அவர்களை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் அரசியல் கட்சியில் உள்ள ஒருசிலர் முக்கிய பிரமுகர்களையும் பாஜக கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார் முருகன்.


கூடவே கந்தசஷ்டி கவசம் குறித்து அவர் நடத்திய போராட்டம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் அவருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது. அடுத்த கட்டமாக அவர் எடுக்கும் அவதாரம் வெற்றிவேல் யாத்திரை என்ற ரதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி அவர்களோடு ஒப்பிட்டு அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் படத்தையும் அவரது பாடலையும் பயன்படுத்தி அதிமுகவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் தந்துள்ளார். எல்.முருகன் அவர்களின் இந்த செயல்பாடு இன்றைக்கு தமிழகம் முழுவதும் ஒரு பேசும் பொருளாக அமைந்துவிட்டது.


தோழமை கட்சி என்று கூட பார்க்காமல் ஒரு கட்சியின் நிறுவன தலைவரையே தங்கள் கட்சி வளர்ச்சிக்காக சந்தர்ப்பம் பார்த்து திட்டமிட்டு தங்கள் கட்சிக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை தமிழகத்திற்கு உருவாக்குவதற்கு எம்.ஜி.ஆர் பெயரையும் அவரது புகைப்படத்தையும் சாமர்த்தியமாக பயன்படுத்தியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன். இது ஒருவகையில் அதிமுகவிற்கு தோழமை கட்சி என்ற அடிப்படையில் வலுசேர்ப்பதற்கு பயன்படலாம். அல்லது திமுகவை பலகீனப்படுத்துவதற்கு பயன்பட கூடும் கிட்டத்தட்ட அதிமுகவும், பாஜகவும் திமுகவின் எதிரியாக உருமாறி இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒபிஎஸ் ரவீந்திரதாஸ் தனது லட்டர் பேடலிலேயே பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டு உள்ளார் என்ற புகாரும் கூறப்பட்டு வருகிறது.


இந்த செயல்பாடுகளை பார்க்கும் பொழுது பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைமையின் தொடர் நடவடிக்கை என்பது மக்கள் மத்தியில் வெகு விரைவாக பரவக்கூடிய வகையில் அமைந்து வருகிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடுத்த சர்ச்சை மத ரீதியான ஒரு பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆக்கப்பட்டு கூட்டணி கட்சியான திமுகவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்கின்ற அளவிற்கு இந்துப் பெண்களுக்கு ஆதரவாகவும் தொல்.திருமாவளவன் தோழமை கொண்டுள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு எதிரான பிரச்சாரத்தையும் தமிழகத்தில் பாஜக கட்சி முன்னெடுத்து செல்கிறது.


இந்த செயலை ஒரு வகையில் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிட மக்கள், தலித்துக்கள், பட்டியலின வகுப்பைச் சார்ந்தோர்கள் வாக்கு வங்கியினை ஒருங்கிணைப்பதற்கு பயன்படும் என்று திராவிட கட்சிகள் அச்சம் கொண்டுள்ளனர். இருந்தாலும் மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக கட்சியும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தனி கவனம் செலுத்துவதை பார்த்து அதிமுகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் தங்களது கருத்துக்களை வெளியிடாமல் மௌனம் சாதித்து வருகிறார்கள். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படத்தை பாஜக கட்சி பயன்படுத்துவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.


- சாமி