திருமணம் எதற்காக? குறளார் கோபிநாதன்

திருமணம் எதற்காக?
குறளார் கோபிநாதன்


இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் தான் சிறந்த நல்ல காரியங்களைச் சமுதாயத்திற்குச் செய்ய முடியும். துறவறத்தில் இருப்பவர்களுக்குக் கூட இல்லறத்தில் இருப்பவர்கள் தான் துணையாக இருக்க முடியும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.


“துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.” (குறள் - 42)


துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன் தான் துணையாக இருப்பான் என்கிறார். எனவே திருமணம் என்பதே இருவரும் இணைந்து நல்ல காரியங்களைச் செய்வதற்காகத் தான். திருமணம் என்பது குழந்தைகள் பெறுவதற்காக மட்டுமல்ல. பலபேர் திருமணம் எதற்கு என்று தெரியாமலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். பெண்கள் இயற்கையிலேயே இளகிய மனம் படைத்தவர்கள். எனவே, அவர்களோடு சேர்ந்து நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் திருமணம். சிலபேர் பிள்ளை குட்டி பெறுவதற்காகத் தான் திருமணம் என்று நினைத்துக் கொண்டு வருஷம் தவறாமல் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஒருத்தரை எவ்வளவு குழந்தைகள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆண்டவன் மூனு கொடுத்திருக்கார் என்றார். இன்னும் கொடுப்பாரா என்று கேட்டேன். யார்விட்டது? கொடுக்காம எங்கே போயிடுவார்? என்கிறார்.


இளகிய மனம் படைத்த பெண்ணுடன் சேர்ந்து நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது தான், திருமணத்தின் நோக்கம். எப்ப பார்த்தாலும் மனைவியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் செய்கிற சிறு சிறு வேலைகளையும் பாராட்ட வேண்டும். அப்பொழுது தான் இல்லறம் சிறப்பாக அமையும். நண்பர் ஒருவர் தன்னுடைய மனைவி எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் அவரிடம், “உங்கள் மனைவி செய்கிற சின்ன சின்ன காரியங்களையும் பாராட்டுங்கள். உதாரணத்திற்குச் சாப்பிடும் போது குழம்பு நல்லாயிருக்கு, கூட்டு நல்லாயிருக்குன்னு சும்மாவாவது பாராட்டுங்கள், எல்லாம் சரியாயிடும்" என்று சொன்னேன். இரண்டு நாள் கழித்து நண்பர் சோகமாய் வந்து, “என் மனைவி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா என்றார்” என்ன விஷயம் என்று கேட்டேன். நீ சொன்ன மாதிரி நேற்று சாப்பாடு பரிமாறும் போது மனைவியிடம் குழம்பு ரொம்ப ஜோராயிருக்குன்னு சொன்னேன். அவள் என்னைக் கோபமாய் முறைத்தாள். சரியா பாராட்டவில்லை என்று நினைத்துக் கொண்டு, ரசம் ரொம்ப பிரமாதம் என்று சொன்னேன். அவள் பல்லை நறநறவென்று கடித்தாள். கூட்டு வச்ச கைகளுக்குத் தங்கக் காப்பு போடனும்னு சொன்னேன். என்னை அடிக்கவே வந்துட்டாள். என்ன விஷயம் என்று கேட்டேன்.


அதற்கு அவள், “ஏன்யா! இவ்வளவு நாள் நான் சமைச்சேன். ஒரு நாள்கூட இப்படிப் பாராட்டினதில்லை. இன்னைக்கு உடம்பு சரியில்லையென்று என் தங்கச்சியைச் சமைக்கச் சொன்னேன். அவ கைக்குத் தங்கக் காப்பு போடுவியா?” என்று சண்டை போட்டு விட்டு, போய் விட்டாள் என்று சொன்னார்.


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (குறள் - 56)


தன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு இல்லாதவளே மனைவியாவாள்.