பெண்ணிற் பெருந்தக்க யாவுள? குறளார் கோபிநாதன்

உலகத்திலேயே சிறப்பான படைப்பு பெண்ணினம் தான் என்று சொல்வார்கள். இறைவன் தான் செய்ய வேண்டியதை ஒரு தாயின் மூலம் செய்வதால் தான், ஒரு தாயினை இறைவனுக்கு ஒப்பாகச் சொல்கிறார்கள். வள்ளுவப் பெருந்தகையே பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும் போது,


“பெண்ணிற் பெருந்தக்க யாஉள? கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்” (குறள்-54)


கற்பு என்னும் கலங்காமையாகிய மனத்தின்மை இருந்துவிட்டால் பெண்ணைவிட உயர்வாக உயிர்கள் யாவை உள? என்கிறார். அதனால் தான் இல்லத்திற்குரிய மனைவியை வாழ்க்கைத் துணைநலம் என்றே குறிப்பிடுகிறார். மனைவி சிறப்புடையவளாக இருந்துவிட்டால் அந்த இல்வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. வள்ளுவப் பெருந்தகை ஒருபடி மேலே சென்று,


“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள் - 55)


கணவனைத் தினமும் தொழுதெழும் மனைவியானவள் மழையை வர வைக்கும் சக்தியைக் கூடப் பெறுவாள் என்கிறார்.


ஒருநாள் கூட்டத்தில் நான் இந்தத் திருக்குறளை விளக்கிச் சொன்ன பிறகு நண்பர் ஒருவர் சந்தித்துச் சொன்னார் “நீங்கள் சொன்னதுபோல், என் மனைவி ஒருநாளாவது என் காலைத் தொட்டுக் கும்பிட்டு எழுவாளா என்று பார்த்தேன். நேற்று நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தபோது, என் மனைவி குளித்துவிட்டு வந்து, என் காலைத்தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மூன்று முறை சுற்றி வந்து, என் முகத்தையே உற்றுப் பார்த்தான். நான் ஆச்சரியப்பட்டுத் திருக்குறளைப் படித்து விட்டுத்தான் காலைத்தொட்டுக் கும்பிடுகிறாள் என்று நினைத்து என்ன விசயம் என்று கேட்டேன். அதற்கு அவள் “நேற்று ஒரு சாமியார்கிட்ட போய் என் குறைகளையெல்லாம் சொன்னேன். அதற்கு அவர் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு வந்து ஆஞ்சநேயர் காலைத் தொட்டுக் கும்பிட்டு முகத்தை உற்றுப் பார்த்தால் நல்லது நடக்கும் என்று சொன்னார். அதனால் தான் உங்க காலைத் தொட்டுக்கும்பிட்டு உங்க முகத்தை உற்றுப் பார்க்கிறேன்” என்று சொன்னாளாம்.


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட்பேறு (குறள் - 60)


மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.