அகில இந்திய காங்கிரஸ் ஆட்சி வேண்டும் மாற்றம் தேவை! தலைவரை தேடுங்கள்!

குதிரைகள் ஓடுவதற்கு தயாராக இருந்தும் இரதத்தை இயக்கும் சாரதி சவாரி செய்ய மறுப்பது ஏற்புடையது அல்ல! அதே நேரம் ரதத்தில் பயணிக்கும் வயதான பணியாளர்கள் ரதம் நின்ற பிறகும் கீழே இறங்க மறுக்கிறார்கள். இலக்கை அடைவதற்கு வழிகாட்ட வேண்டியவர்கள் பின் வரிசையில் அமர்ந்துக் கொண்டு முன் வரிசையில் நிற்பவர்களை மதிப்பதில்லை. மாறாக எதிர்ப்பைக் காட்டி முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களை விரட்டியடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.


இதனால் குதிரையின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து வெற்றியை ஈட்டிய குதிரைகள் நடைதளர்ந்து போய் அசைபோட தொடங்கி விட்டது. இதனால் ரதம் நிற்கிறது. சாரதியோ குதித்து தப்பிவிட நினைக்கிறார் (ராகுல்காந்தி). ஆனால் திரைமறைவில் நின்று ரதத்தை இயக்க முயற்சிக்கிறார் இப்பொழுது குதிரைகள் ஒட மறுத்து தண்ணீரை தேடுகிறது. அதற்கு வழியில்லை. அந்தோ பரிதாபம் மாற்றமா அல்லது மாற்றுவழியா? யோசிக்க (இளைஞர் படை) தோன்றுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகளும் ரதயாத்திரையும் சில காலம் மத்தியில் ஓடினால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டது.


இதனால் பல காலம் நின்று கொண்டு எஜமானனுக்கு சலாம் போட்டது. போதும் இனி நல்ல எஜமானாராக மாற வேண்டும் என்று நினைத்து பல குதிரைகள் பண்ணையை (காங்கிரஸ்) விட்டு வெளியேறி தனி ஆவர்த்தனம் செய்து ஆட்சியை பிடித்துள்ளது. ரதத்தை செலுத்த ஒருவர் கூட தயாரில்லை. அல்லது ரதத்தை இயக்க ஒருவரை அனுமதிக்க முடியவில்லை . நின்ற ரதம் நின்றபடி மீண்டும் மீண்டும் தற்காலிக ஏற்பாடாக நியமனம் செய்யப்படுகிறது. ரதத்தை இயக்குவதற்கு புதிய ஏற்பாடு ஆனால் பழைய சாரதியே! தேரை ஓட்டுவதற்கு தயார். ஆனால் இப்பொழுது தேர் ஓட மறுக்கிறது. குதிரைகள் நிற்கிறது ரதத்தில் பயணிப்போர் மட்டும் கீழ் இறங்கவில்லை. இந்த நிலையில் தான் அகில இந்திய காங்கிரஸ் என்கின்ற ரதம் ஆட்சியை இழந்து நிற்கிறது.


தொண்டர்கள் சோர்வுற்று காணப்படுகிறார்கள். மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்களான சரத்பவார் (மகாராஷ்டிரா), மம்தாபனர்ஜி (மேற்குவங்கம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) போன்றோர் முதல்வர்களாக பதவி வகிக்கிறார்கள். இந்த நிலை ஏன் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. அந்தோனி அறிக்கையை தூசிதட்டி எடுத்து படித்துப்பார்த்தால் உண்மை தெரியும்.


பெரும்பான்மை வாக்குகள் சரிவும் புரியும். சிறுபான்மை மக்கள் கைவிட்டு போனதும் தலித் தலைவர்கள் தனித்தனியாக இயக்கம் கண்டதும் காங்கிரஸ் தோல்வியும் தெரியவரும். குடும்பமா கட்சியா? என்ற நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் தற்பொழுது தள்ளாடுகிறது? கட்சியை விட்டுவிட்டால் காந்தி குடும்பம் ஆபத்தில் சிக்கிவிடும் அபாயம் ஏற்படும்? குடும்பத்தையும் கட்சியையும் காப்பாற்ற நினைத்தால் கட்சி காணாமல் போய்விடும். ஆட்சி அதிகாரம் திரும்ப கிடைக்காது.


எனவே சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மூவரையும் விட்டுவிட்டால் மூத்த தலைவர்கள் வாழ்க்கையும் பதவி சுகமும் நிலைக்காது. அதனால் சச்சின்பைலட் போனால் என்ன? ஜோதிர் ஆதித்யா போனால் என்ன? ஏன் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் போனாலும் மத்தியபிரதேசத்தில் போனதும் குறித்தும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கவலை இல்லை!


தங்கள் நிலையை மூத்த நிர்வாகிகள் மாற்றிக் கொள்ளவும், இளைஞர்களுக்கு வழிவிடவும் தயார் இல்லை. ஆகவே அகில இந்திய காங்கிரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் பெற்ற வாக்குகள் 11 கோடி என்பதை நினைத்து பலனொன்றும் இல்லை! வீட்டுக்கு வெளிச்சம் வேண்டி கூரையை எரிக்க இயலாது. பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடியை எதிர்க்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தலைமையும் வரப்போவது இல்லை. மீண்டும் ஆட்சி வேண்டும் என்றால் முதலில் தலைவர்களுக்குள் மிகப் பெரிய அளவில் மாற்றம் வேண்டும். இல்லையேல் இல்லை ஆட்சி இருப்பதையும் இழக்க வேண்டியே நிலை உருவாகும்.


- டெல்லிகுருஜி