திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரம் உள்ளவரா? அதிகாரம் அற்றவரா? ஆட்டி வைக்க ஐந்து பேரா?

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பொருளாளராக டி.ஆர்.பாலு இருவரும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றுக் கொண்டார்கள். கூடவே சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கொள்கைப் பரப்பு செயலாளர் ஆர்.ராஜா அவர்களும் துணை பொதுச்செயலாளர்களாக சட்ட விதிகளை திருத்தம் செய்து துணைப் பொதுசெயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி துணைப் பொதுசெயலாளர்களாக 5 பேர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமனம் என்பது சாதி ரீதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி உயர்பதவிகளில் தேவர் சமுதாயத்திற்கு இரண்டு முக்கியப் பதவிகளும் தலித் சமுதாயத்திற்கு இரண்டு முக்கிய பதவிகளும், முதலியார் சமுதாயத்திற்கு இரண்டு முக்கியப் பதவிகளும் என்ற விகிதாச்சாரப்படி பதவிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.


இத்தகைய நடவடிக்கை பொதுச்செயலாளரின் அதிகாரிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்காகவா அல்லது பொதுச்செயலாளர் அதிகாரத்தை குறைப்பதற்காகவா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் “செட்டியார் பால் வார்த்தை கதை” அதுபோல் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பு காட்டும் நேரத்தில் உள்ள திமுக கட்சியில் கொண்டுவருகின்ற சீர்திருத்தம் அனைத்து சாதியினருக்கும் முன்னுரிமை வழங்குகிறோம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் வெற்றியை கோட்டை விட்டு விட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பதவி வழங்கியப் பிறகு ஆட்சியை கைப்பற்றவில்லை. மாறாக ஆட்சியை கைப்பற்றியப் பிறகு அனைத்து சாதியை சேர்ந்தவருக்கும் அரசு பதவியை பகிர்ந்து அளித்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் ஐந்து நபர்களுக்கு ஐந்து சாதி சார்பாக துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஒருவேளை ஆந்திராவுக்கு ஆலோசனை வழங்கிய தேர்தல் கருத்துக் கணிப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி 5 சாதியை சேர்ந்தவர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவியும் பெரும்பான்மை சாதியை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 2021 திமுக வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரம் கடந்த 50 ஆண்டுகளாக அதிகாரம் படைத்த பொதுச்செயலாளராக மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இருந்து வந்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் வசம் இருந்த பொதுச்செயலாளர் அதிகாரங்களை கட்சியின் தலைவருக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதற்காக கட்சியின் விதியில் திருத்தம் கொண்டு வந்ததாக தெரியவந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 துணைப் பொதுச்செயலாளர்கள் 1 பொதுச்செயலாளர் என்பது எத்தகைய அதிகார வரம்பிற்குள் உட்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு வேளை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அந்த மாற்றத்திற்கு காரணமாகவும் அமையலாம். அல்லது வெற்றிக்கு ஆதரமாகவும் இருக்கலாம். தேர்தல் முடிவு என்பது வேறு விதமாக அமைந்து விட்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களே ஏற்க வேண்டும் என்ற நிர்பந்தமும் உருவாகலாம். 


இத்தருணத்தில் பெரும்பான்மை மக்களின் கேள்வி ஐந்து துணை பொதுச்செயலாளர்களுக்கும் வெற்றி தோல்வி பங்கு உண்டா என்பது தான். கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் திமுக கழகத்திற்கு மிகப் பெரிய அளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது திமுக கட்சியின் டெபாசிட்டையே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை இரண்டையும் நினைத்து பார்க்கும் பொழுது மிக மிக எச்சரிக்கையுடன் திமுக தலைமை செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. 2019 ல் நடைபெற்ற நாடாளுமன்ற முடிவு என்பது திமுகவுக்கு 100% வெற்றியை ஈட்டி தந்தது போல் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவு அமையாது என்பதையும் மனதில் இருத்திக்கொண்டு செயல்பட வேண்டிய தருணமும் இப்பொழுது திமுக விற்கு ஏற்பட்டுள்ளது.


10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக தங்கள் ஆட்சிக் காலத்தில் எத்தகைய நிலையை செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். ஆட்சியாளர்களின் குற்றம் குறைகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்கின்ற பணியினை திமுக முழு வீச்சில் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக தவணை முறையிலேயே பிரசாந்த் கிஷோர் என்ற ஏஜென்டை நியமனம் செய்து பொதுமக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் திமுகவினரிடம் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அத்தகைய முயற்சிகளுக்கு இத்தகைய கட்சி கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், நியமனங்களும் துணை நிற்குமா? என்பதை போக போகத் தான் பார்க்க வேண்டும். அக்னிமலர்கள் கடந்த வாரம் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது அந்த பதிவில் பொதுச்செயலாளராக துரைமுருகன் நியமனமும் பொருளாளராக டி.ஆர்.பாலு அவர்களும் நியமிக்கப்பட்டதின் மூலம் 10% வாக்குகள் திமுகவிற்கு கூடுதலாக கிடைக்கும் என்று கூறி இருந்தது. ஆனால் தற்பொழுது 5 துணை பொதுச்செயலாளர்கள் 5 ஜாதியினரை சேர்ந்தவர்களுக்கு இரட்டை பதவிகள் என்று வழங்கப்பட்டிருப்பது 15% வாக்குகளை உயர்த்திவதற்கு பதிலாக 15% வாக்குகளை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுமோ என்று தற்பொழுது கேள்வியை எழுப்புகிறது.


குறிப்பாக கட்சியின் தலைமை தொண்டர்களின் உணர்வு வாக்காளர்களின் விருப்பம், இவற்றை தெளிவாக தெரிந்துக் கொண்டு இத்தகைய முடிவை மேற்கொண்டு இருக்கிறதா அல்லது அரசியல் கருத்து கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர் அவர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு மேற்கண்ட முடிவுகளை கட்சி தலைமை எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. முடிவு என்பது வாக்காளர்களின் கையில் உள்ளது. தோல்வி என்பது அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலையை பொறுத்தது.


- டெல்லி குருஜி