திமுக என்ன செய்ய போகிறது?

திமுக என்ன செய்ய போகிறது?


தமிழ் மக்களின் இதயங்களை தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தி உறக்கத்தை கலைத்து உழைத்து வாழ்வதற்கு காலத்தையும் நேரத்தையும் தட்டி வளைத்து தமிழனுக்கு சாதகமான நிலையை உருவாக்கி போது நலத்தொண்டினால் புகழ் மாலை சூடிக்கொண்டார் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுக கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதற்கு பெரும் முயற்சி செய்து அந்த முயற்சியின் இடையிலேயே முதுமையினாலும், கடின உழைப்பாலும் தமிழர்களின் மூச்சுக் காற்றாய் வாழ்ந்தவர். மீண்டும் கழக ஆட்சியை காண்போம் என்று நம்பிக்கையோடு இருந்தவர். இன்று நம்மிடம் இல்லை. சுமார் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சி இல்லாத காலம் கலைஞர் அவர்களின் தவப்புதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பை ஏற்று திமுக சிதறுண்டு போகாமல் கட்டுக்கோப்பாக கழகத்தை வழி நடத்துகிறார். கழக தலைவர் பொதுச்செயலாளர் பொறுப்பு இளைஞரணி செயலாளர் உதயநிதி மகளிரணி செயலாளர் கனிமொழி என்ற அளவில் பதவிகளை சுமந்துக் கொண்டு திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அரியனை ஏறுவதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


பதவி ஆசை என்பது எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் தனது விருப்பத்தினை கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் அல்லது தெரிவித்திருந்தும் அதற்கு கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை என்பதற்காக பொது தேர்தல் நெருங்குகின்ற வேளையில் இப்படி ஒரு காரியத்தை கு.க.செல்வம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையே ஏன் உணராமல் போனார் என்ற கேள்வி எழுகிறது. திமுக தலைமை அதன் வாக்கு வங்கியின் மீது உள்ள நம்பிக்கை 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வழியை கண்டறிந்து அதற்கேற்றாற் போல் யுக்திகளை வகுக்காமல் உழைப்புக்கு திமுக தொண்டர்களும் ஆலோசனை வழங்குவதற்கு பிரசாந்த் கிஷோர் அவர்களும் என்ற நிலையில் எத்தகைய வெற்றியை சுலபமாக அடைய முடியும் என்று திமுக கருதுகிறது என்பதை உணர முடியவில்லை .


பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டி விரும்பினாலும் மூப்பு அடைப்படையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் அந்த பதவிக்கு பொறுத்தமானவர் என்றாலும் அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. இது திமுக கழக தொண்டர்களிடத்திலும் வாக்கு வங்கி இடத்திலும் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரியின் பலம் அறிந்து ஆளுங்கட்சியின் தவறுகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி அடுத்துவரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற சலசலப்புகள் மிகப் பெரிய பின்விளைவை ஏன் ஏற்படுத்தாது.


மத்திய ஆட்சியில் பிரதமர் மோடி அவர்களும் உள்துரை அமைச்சர் அமித்ஷா அவர்களும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை வழிநடத்தி கொண்டிருக்கும் தருணத்தில் அவர்கள் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி உள்ளது என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு திமுக ஆட்சியை கைப்பற்றுகின்ற பணியில் ஈடுபடவேண்டும். சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மண்ணில் கோலோச்சி வரும் திமுக கழகம் சமூக நிதி, கல்வி வேலைவாய்ப்பு, சமத்துவம், மாநில சுயயாட்சி, மாநில உரிமைகள், தமிழர் நலன் மொழியின் வளர்ச்சி ஆகியவற்றில் மத்திய அரசுடன் சமரசம் செய்து கொள்கின்ற அளவில் எதிர்கால அரசியல் அமைந்து விட்டால் வெறும் பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த பெருமைகளையும் புகழையயும், தமிழ் மொழியையும் தமிழர்களையும் பாதுகாத்து விட முடியாது.


தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. அதுபோன்றது ஒரு நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டு விடாத அளவிற்கு கவனமுடன் இருந்து திமுக கழகம் அரசியல் களம் ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக 74வது சுதந்திர தின நிகழ்வும் பிரதமர் மோடி அவர்களின் உரையும் காட்சிகளும் அமைந்துள்ளது. மத சார்பற்ற நாட்டில் 130 கோடி மக்கள் வசிக்கும் போது வண்ணத்தால் மட்டும் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது. நல்லெண்ணத்தால் மட்டுமே மக்கள் இதயங்களை வெல்ல முடியும். இந்த கருத்து புரியவேண்டியவர்களுக்கு புரிய வேண்டும். குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் தங்களை சுயபரிசோதனை செய்துக்கொண்டு பாஜக கட்சியின் அதிவேக செயல்களுக்கும் விரைவான மாற்றத்திற்கும் மாற்றுவழி என்ன என்பதை ஒருங்கிணைந்து யோசிக்க வேண்டும்.


பெரும்பான்மை இந்துக்களுக்கும், சிறுசான்மை சமய மக்களுக்கும் அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் அவசியம் என்பதை வலியுறுத்துவதே மனித நேயம். இதற்கு திமுக அதன் கூட்டணி கட்சிகளும் எத்தகைய முயற்சியை மேற்கொள்ள போவது என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு.