டாக்டர் இராமதாசின் அதிரடி பேச்சு! பா.ம.க.வின் எதிர்காலம்! அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி

டாக்டர் இராமதாசின் அதிரடி பேச்சு! 


பா.ம.க.வின் எதிர்காலம்! அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி பாட்டாளி மக்கள் கட்சியில் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கணொளி காட்சி மூலம் டாக்டர் இராமதாஸ் நடத்தினார். அப்போது பல்வேறு கருத்துக்களை தனது கட்சியினருடன் பகிர்ந்து கொண்டதுடன், ஆளுங்கட்சியான அதிமுகவும், தோழமையான கட்சியான பாஜக குறித்தும் கடுமையான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டாக்டர் இராமதாஸ் 2021-ல் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணியில் இணைந்து விடுவாரோ என்ற சந்தேகமும், திமுக கூட்டணியில் இணைந்து விடுவார் என்கின்ற கற்பனையான தோற்றத்தையும் உருவாக்கியுள்ளது.


கடந்த நாடாளுமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி அதிமுக கூட்டணியில் தொடரவேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் 50 சட்டமன்ற தொகுதிகள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் இராமதாஸ் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஒத்துவரவில்லையென்றால் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்தியில் உள்ள பாரதியஜனதா கட்சியில் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஏற்பாட்டினை அன்புமணி செய்து வருவதாகவும் அதற்கு சரியான முறையில் ஆதரவு மோடி அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற தகவலும் டாக்டர் இராமதாஸ் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளதா? ஒருவேளை அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தின் போது அன்புமணி அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து விட்டால் தமிழ்நாட்டில் பாரதியஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைவதற்கு தனது ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் டாக்டர் இராமதாஸ் தனது கட்சியினருடன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளாராம்.


மத்திய அரசின் மீது இராமதாஸ் அவர்களின் மோதல் போக்கியை வன்னியர்கள் விரும்பவில்லை என்ற தகவல்கள் பல்வேறு தரப்புகள் வெளிவருகின்ற தருணத்தில் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற அதிமுகவின் அரசின் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால் அது பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்கின்ற அச்சமும் வன்னியர்கள் மத்தியில் எழுந்துள்ளதாம். கடந்த 31 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும், வழிநடத்தி வரும் டாக்டர் இராமதாஸ் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்த போதும் கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதும் 23 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறமுடிந்தது என்பது கடந்த கால வரலாறு. சுமார் 2 கோடியே 50 லட்சம் வன்னியர்கள் தமிழ்நாட்டில் வசித்த போதிலும் டாக்டர் இராமதாஸ் ஆதரவு பெற்ற வன்னியர்கள் வாக்கு என்பது வெறும் 23 லட்சம் வாக்குகள் என்பதை கணக்கில் எடுத்து கொண்டால் இன்னும் 2 கோடியே 27 லட்சம் வன்னியர்கள் இராமதாசிற்கு எதிராக இருக்கிறார்கள் என்று கணக்காகிவிடும். இத்தகைய சூழலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வன்னியர்கள் இன்று உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவை தவிர ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாக்குகளை விரும்புகின்ற கட்சிகளுக்கு பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் டாக்டர் இராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை கடந்த 30 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றி தரவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் அவர் மீது கூறப்படுகிறது. பாமாகாவில் இளை டாக்டர் அன்புமணி அவர்கள் வருகைக்குப் பின்னும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை 2014ம் ஆண்டு சந்தித்த போதும் பாமகாவால் ஒரு தொகுதியும் கூட வெற்றிப்பெற முடியவில்லை. அதே போல் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி இருந்தபொழுதும் ஒரு தொகுதியை கூட பாமக வெற்றிப்பெற முடியவில்லை.


2014-ம் ஆண்டு தனித்து போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தருமபுரி நாடாளுமன்ற தொகுதியிலும் டாக்டர் அன்புமணியால் தோல்வியை மட்டுமே சந்திக்க முடிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுகவுடன் ஏற்பட்ட தேர்தல் உடன்படிக்கையின் படி இராஜ்யசபா (மேற்சபை) பதவிக்கு டாக்டர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். முழுக்க முழுக்க அதிமுக ஆதரவுடன் என்பது ஊரறிந்த விஷயம். இந்த சூழ்நிலையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை உள்ளது. ஆனால் சமீபத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக்குப் பிறகு டாக்டர் இராமதாஸ் அவர்களின் குரல் மத்தியில் ஆளுங்கின்ற பாஜகவுக்கு எதிராகவும் மாநிலத்தில் ஆளுகின்ற அதிமுக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியாகவும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் இராமதாஸ். இத்தகைய வெறுப்பு ஏற்படுவதற்கு முழு முதற் காரணமாக அமைவது மத்தியில் தனது மகன் அன்புமணிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வில் உறுப்பினர்கள் நியமனத்தில் இராமதாசின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கவில்லை என்ற நிலையில் இரண்டு ஒன்றாக சேர்ந்து கொண்டதின் விளைவும் கூடவே வன்னியர் ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தும் கடந்த பத்தாண்டுகளில் ஒரு வன்னியர் கூட துணைவேந்தர் பதவிக்கு நியமிக்க படாததும் மாநில அரசு மீது இராமதாசுக்கு ஏற்பட்ட அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகிறது.


தற்பொழுதுள்ள சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்தாலும் 2021-ம் ஆண்டு தேர்தல் வந்தால் புதிய யுக்தியை பயன்படுத்தி தனது திட்டத்தை டாக்டர் இராமதாஸ் தான் விரும்புகின்றபடி கூட்டணியில் இடம்பெறுவார் என்பது தான் உறுதியான தகவலாக தெரிகிறது.


- டெல்லிகுருஜி